20 லட்சம் வேலைவாய்ப்புகள்; 6 ஆண்டுகளில் ரூ.6.53 லட்சம் கோடி முதலீடு! முதலமைச்சர் சொன்ன புள்ளிவிவரம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் தகுதிவாய்ந்த தொழில்களுக்கு முதல் நான்கு ஆண்டு காலம் செயல்படத் தேவையான அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் “FAST TN” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார். மேலும், ``கடந்த 6 ஆண்டுகளில் 6.53 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 81% பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 61,500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சிறந்த தொழில் முனைவோர், சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி தொழில் முனைவோர், சிறந்த மகளிர் தொழில் முனைவோர், சிறந்த வேளாண் சார்ந்த தொழில் முனைவோர் ஆகிய பிரிவுகளில், சிறப் பாக செயல்படும் நிறுவனங் களுக்கும் மேலும் இத்துறைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.