×

இரட்டை வேடம் யாருக்கு வெற்றியைத் தந்தது?
11 வேடங்களில் நடித்த நடிகர் இவரா...?

 
aalavanthan

இந்தப்படத்தில டபுள் ஆக்டா என்று ரசிகர்கள் ஆவல் பொங்க கேட்பார்கள். அப்படி என்றால் அந்தப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் ஒருவித ஆவல் ஓடும். உடனே நண்பர்களுடன் அன்றைய தினமே மாலை டூரிங் டாக்கீஸ் முன்பு குவிந்து விடுவர். இது எம்ஜிஆர் காலம். அப்போது இருந்து இப்போது வரை டபுள் ஆக்ட் என்றாலே ஒருவித ஆவல் நமக்கு வந்துவிடுகிறது. ஏனென்றால் இந்தக் கதாநாயகன் 2 வேடங்களில் எப்படி வித்தியாசம் காட்டி நடித்து இருப்பார் என்று தான் பார்ப்போமே என்று வர ஆரம்பிக்கிறது அந்த ஆவல். அதிலும் ஒருவர் ஹீரோவாகவும், மற்றவர் வில்லனாகவும் நடித்தால் கேட்கவே வேண்டாம். அந்தப்படம் சூப்பர் ஹிட் தான். அப்படி வந்தப்படங்கள் ஏராளமாக இருந்தாலும் கமலின் இந்திரன் சந்திரன், ஆளவந்தான், அஜீத்தின் வாலி போன்ற படங்களை மிகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இரட்டை வேடங்களே இப்படி என்றால் 3, 4, 9, 11 வேடங்களிட்ட நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வம் வரும்?  


தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், அஜீத் போன்ற நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடித்;து மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது இறுதிகாலத்தில் இரட்டை மனிதன் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் வெற்றிபெறவில்லை. 1950ல் வெளியான திகம்பர சாமியார் என்னும் படத்தில் நம்பியார் 11 வேடங்களில் நடித்து இருப்பார். மருதகாசி தயாரிக்க டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருக்கும் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக்காலத்திலேயே ஒரு சமூக த்ரில்லரான துப்பறியும் கதையை எடுத்திருப்பது வியக்க வைக்கிறது. இந்தப்படத்தில் தான் நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே...பாடல் வருகிறது.

தமிழ்சினிமாவில் முதல் முறையாக நாயகன் இரட்டை வேடமிட்டு நடித்த படம் உத்தமபுத்திரன். இந்தப்படம் 1940-ல் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் பி.யு.சின்னப்பா கதாநாயகனாக நடித்த படம் இது. பின்னாளில் 1958-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் உத்தமபுத்திரன் என்ற அதே பெயரில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்து வந்தார். இவ்விரு படக்கதையும் கூட ஒன்றாகத்; தான் இருக்கும்.

அதேபோல் நடிகைகளில் ஜெயலலிதா, வாணிஸ்ரீ, லட்சுமி, சினேகா, ஜோதிகா, அசின் ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். பிரியாமணி சாருலதா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நடிகைகளுக்கு அந்தளவிற்கு இரட்டை வேடம் கிடைக்கவில்லை எனலாம். இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். இரு வேடங்களிலும் நடிகர் வித்தியாசத்தைக் காட்டியே ஆக வேண்டாம். இதுபோன்ற படங்களில் நடிக்கும்போதுதான் நடிகருக்கு தனித்திறன்கள் வெளிப்படும். மேலும் அவரது மதிப்பும், மரியாதையும் உயரும். 

மொத்தத்தில் அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் அதிகமாகும். அடுத்த நிலையை எட்டிப்பிடிக்க இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒரு மாஸ் ஏற்படும். நடிகர்களில் யார் யார் இரட்டை வேடங்களில் நடித்தனர்? இரட்டை வேடங்கள் அவர்களுக்கு கைகொடுத்ததா? எத்தனை படங்கள் அவர்களுக்கு ஹிட்டாகின? ரசிகர்களின் பார்வையில் உங்களுக்காக சில தகவல்கள்...

இரட்டைவேடங்களில் நடிக்கும்போது இருவேறு குணாதிசயங்களுடன் நடிகர் நடிக்கவேண்டியிருப்பதால், ரசிகர்களின் பார்வை வீச்சானது இருமடங்கு அதிகரிக்கும். இந்த படம் வெற்றிபெற்றால், அது மாபெரும் வெற்றியாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு சில படங்கள். 

எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பல உள்ளன. நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோவில், நீPரும், நெருப்பும் போன்ற படங்கள் வெற்றியை வாரிக்குவித்தன. அதேபோல் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் உத்தமபுத்திரன். எம்ஜிஆருக்கு நாடோடி மன்னன் பேரும் புகழையும் பெற்றுத்தந்தது. 


எம்ஜிஆருக்கு எங்கவீட்டுப்பிள்ளை படத்தில் நடித்த பிறகு தான் மக்கள் அவர் மீது அபரிமிதமான அன்பைக் காட்டினர். இதுதான் அவரது அரசியல் வெற்றிக்கு அடிகோலியது. 
சிவாஜிக்கு உத்தமபுத்திரன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இவ்விரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தான் அவர்களின் அந்தஸ்து ஒரு படி உயர்ந்தது. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களிலும் மாறுபட்ட குணாதிசயத்துடன் நடித்து ரசிகர்களின் விழிகளை விரியச் செய்தார். கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்துவிட்டார். 

ஆம்...10 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இந்தப் படத்தில் அசுரத்தனமாக நடித்திருப்பார் கமல். அதுதான் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் படம். ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்தில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நடித்த படம் தில்லுமுல்லு. மீசையுடனும், மீசையில்லாமலும் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். அதேபோல் புன்னகை மன்னன் படத்தில் கமல் இரட்டை வேடமேற்று நடித்திருப்பார். இதில் ஒரு நாயகன் சார்லிசாப்ளின் கேரக்டரில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். மற்றொருவர் டான்ஸ் மாஸ்டராக படத்தில் நடனத்தில் வெளுத்து வாங்குவார். படம் பார்ப்பதற்கே வெகு ரசனையாக இருக்கும். அதற்குள் படம் முடிந்து விட்டதே என்று தான் எண்ணத் தோன்றும். 

அதுபோல் ரஜினிகாந்த் போக்கிரி ராஜாவில் இரட்டை வேடம் ஏற்றிருப்பார். கமல் கல்யாணராமனிலும், ஜப்பானில் கல்யாணராமன் படத்திலும் இருவேடங்களில் நடித்து நம்மை பரவசத்தில் ஆழ்த்தியிருப்பார். ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் கலக்கிய படம் மூன்று முகம். கமல் ஒருபடி மேல் போய் 4 மாறுபட்ட வேடங்களில் நடித்து கலக்கிய படம் மைக்கேல், மதன, காம, ராஜன். கமல் நடித்த ஒரு கைதியின் டைரி படம் இரட்டை வேடத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தந்தை மகன் கேரக்டரில் நடித்த இப்படத்தில் தந்தை கொலைகாரராகவும், கமல் அவரை பிடிக்கும் போலீசாகவும் நடித்து காட்சிக்கு காட்சி நமக்கு ஒரு த்ரில்லான அனுபவத்தைக் கொடுத்திருப்பார். படத்தின் இயக்குனர் பாரதிராஜா. கமலுக்கு இரட்டை வேடமிட்டு அழகுபார்த்த முதல் படம் சட்டம் என் கையில். என்றாலும், கல்யாணராமன் படமே அவருக்கு மதிப்பையும், மரியாதையும், பேரன்பையும் ஈட்டித்தந்தது. தமிழில் இரட்டை வேடங்களில் அதிகளவில் நடித்த கதாநாயகர் யாரென்றால் நாம் கமலை மட்டுமே சொல்லலாம்.

சட்டம் என் கையில், கடல் மீன்கள், ஒரு கைதியின் டைரி, தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், புன்னகை மன்னன், அபூர்வசகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல்மதன காமராஜன், இந்தியன், ஆளவந்தான், தசாவதாரம் வரை இரட்டை வேடங்களில், நான்கு வேடங்களில், 10 வேடங்களில் என லட்டு சாப்பிட்ட மாதிரி வேடங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். இவருக்கு மணிக்கணக்கில் மேக் அப் போடுவது என்றால் கொள்ளைப்பிரியம். அதனால்தான் இந்தியன் தாத்தா போலவும், அவ்வை சண்முகி போலவும், ஆளவந்தானாகவும், தசாவதாரணியாகவும் நடித்து கலக்கியிருப்பார். மேலும் சகலகலாவல்லவனில் இருந்து விஸ்வரூபம் வரை பல படங்களில் இரட்டைப்பண்புள்ள பாத்திரங்களில் நடித்திருப்பார்.

இரட்டை வேடங்கள் என்றால் நேரெதிர் பாத்திரங்களில் நடிப்பதுதான் அடிப்படையான விஷயம். ஒருவர் வீரன் என்றால், மற்றவர் கோழை. ஒருவர் நாடோடி என்றால் மற்றவர் மன்னன், ஒருவர் மந்தப்புத்திக்காரர் என்றால் மற்றவர் கெட்டிக்காரர். ஒருவர் அடிவாங்குபவர் என்றால் மற்றவர் அடிகொடுப்பவர். ஒருவர் நல்லவர் என்றால் இன்னொருவர் கெட்டவர். இதுபோன்ற ஒன்றுக்கொன்று எதிரான கதாபாத்திரங்களைத்தான் ரசிகர்களும் விரும்புகின்றனர். 

ரஜினிக்கு பில்லா படம் இரட்டை வேடப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நெற்றிக்கண், போக்கிரி ராஜா, மூன்றுமுகம், ராஜாதி ராஜா, அதிசயப்பிறவி, தர்மத்தின் தலைவன், சிவாஜி, எந்திரன், லிங்கா படங்கள் இரட்டை வேடங்களில் தூள் கிளப்பின. ரஜினியின் மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படம் இருவேறு குணாதிசயங்களில் நடித்த படம் தான். அதேபோல தில்லுமுல்லு, தர்மதுரை, முத்து, அருணாச்சலம,; போன்ற படங்களிலும் இருபண்பு கொண்ட நாயகனாகவே நடித்திருப்பார்.

  விஜயகாந்த் இரட்டை வேடம் ஏற்று நடித்த படம் தவசி. சத்யராஜ் அமைதிப்படையில் இருபண்பு கொண்ட தோற்றத்தில் நடித்;து கலக்கியிருப்பார். விக்ரமுக்கு அந்நியன் படத்திலும், இருமுகன் படத்திலும் இரட்டை வேடம் தான். ஐ படத்தில் விதவித தோற்றங்களில் நடித்திருப்பார். சரத்குமார் நாட்டாமை, சூரிய வம்சம் படங்களில் இரட்டை வேடமும், நம்ம அண்ணாச்சி படத்தில் 3 வேடங்களிலும் நடித்து இருப்பார். 

அஜீத் சிட்டிசன் படத்தில் 9 வேடங்களிலும், வாலி படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்திலும் நடித்திருப்பார். வில்லன், பில்லா, அட்டகாசம், வரலாறு, விஜய் அழகிய தமிழ்மகன், கத்தி, புலி, மெர்சல் படங்;களில் இரட்டை வேடமிட்டு நடித்திருப்பார். வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலும், எலி படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா பேரழகன், அஞ்சான், வாரணம் ஆயிரம், மாற்றான் படங்களில் இரட்டை வேடமிட்டு நடித்திருப்பார். 

விக்ரம் பிரபு பக்கா படத்தில் இரட்டை வேடம் போட்டார். தற்போது சந்தானம் டிக்கிலோனா படத்தில் 3 வேடங்களிலும், சிவகார்த்திகேயன் தனது பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் இரட்டை வேடத்திலும் நடிக்கவிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் இந்தப்படத்தை அட்லியின் உதவி இயக்குனர் அசோக் இயக்குகிறாராம். மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சிறுத்தை, காஷ்மோரா படத்திற்குப் பின் இந்தப்படத்தில் தான் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தற்போது கௌதம் கார்த்திக் தஷிணாமூர்த்தி ராமர் இயக்கும் புதுப்படம் ஒன்றில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

பிரசாந்த்துக்கு ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படம் பட்டையைக் கிளப்பியது. இரட்டை வேட படங்களில் இந்த படத்தில் இருவேடங்களையும் அடிக்கடி அருகருகே சந்திப்பதாக டெக்னிகல் கொண்டு படமாக்கியிருப்பார்கள். படத்தில் டெக்னிகல் அம்சங்களும் நிறைய இருந்ததால் படம் வெற்றி பெற்றது.

தொகுப்பு தோரணம்: வே.சங்கரன்

From around the web

Trending Videos

Tamilnadu News