×

எளிய மனிதர், உத்தமர்களின் உத்தமர், கிங் மேக்கர் காமராஜருக்கு இன்று பிறந்தநாள் 

 
kr111

காமராஜர்....கர்மவீரர், செற்கரிய சாதனைகளைச் செய்வதில் வல்லவர், சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த மகத்தான தலைவர், ஏழைகளின் முதல்வர், செய்கை வீரர் என இவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அவர் படிக்காவிட்டாலும் படிக்காத மேதையாக வாழ்க்கையை ஏழைகளின் உள்ளத்தில் வாழ்ந்து உயர்ந்து நின்றார். பசியால் குழந்தைகள் வாடி கல்விக்கு ஏங்குவதைப் பொறுக்கமாட்டாமல், முதலில் அவர்களுக்கு சத்துணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பாடங்களைக் கவனிக்க முடியும் என்பதை உணர்ந்து சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அணைகள் பல கட்டினார். தொழிற்சாலைகளை நிறுவினார். வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். எளிய மனிதராய் இருந்து உயர்ந்த சாதனைகளைப் படைத்தார் அமைதியாக. அவரது வாழ்க்கை வரலாறு நம் அனைவருக்கும் ஓர் பாடம்.

இதுபோன்ற தலைவர்கள் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிறக்க மாட்டார்கள் என்பதே திண்ணம். இன்று அந்த மகத்தான தலைவருக்கு 119வது பிறந்தநாள். கல்விக்கண் திறந்தவர் என்பதால் பள்ளிகளில் இன்று அவரது நினைவாக கல்வி வளர்ச்சி நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த உத்தம மனிதரைப் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம். நம் தமிழ்சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்ததது. படத்தின் ரத்தினக்கதைச் சுருக்கத்தை இங்கு காண்போம். 

காமராஜ் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். தமிழக முதல் அமைச்சராகவும் அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தினையும் பெற்ற காமராஜரின் வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் வெளிவந்தது.

20 நாட்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கான இசையமைப்பினை நான்கு நாட்களில் முடித்திருந்தார் இளையராஜா.

இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை மறைந்த .நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும் காமராஜருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால் காமராஜரின் அரசியல் வாழ்க்கை தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

இத்திரைப்படத்தை ரமணா கம்யூனிக்கேசன்ஸ் தயாரிக்க ஏ.பாலகிருஷ்ணன் இயக்கினார். கதையை சேம்பர் ஜெயராஜ், ஜே.பிரான்சிஸ் கிருபா ஆகியோர் எழுதினர். ஜே.மகேந்திரன், ரிச்சர்ட், மதுரம், ஆனந்தி, சாருஹாசன்,  சம்பத்ராஜ் சுமந்த் ஆகியோர் நடித்தனர். எம்.எம்.ரெங்கசாமி ஒளிப்பதிவு இயக்குனர். படத்தொகுப்பை உதிரிப்பூக்கள் வி.டி.விஜயன் செய்தார். இத்திரைப்படம் 13.2.2004 அன்று வெளியானது. 

கடந்த 2004-ஆம் ஆண்டு ரிச்சர்ட் மதுரம் நடிப்பில் வெளிவந்த காமராஜ் படத்தில், 2015ல் மேலும் சில காட்சிகளை சேர்த்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ஒருமுறை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தனர்.

சமுத்திரகனி, காமராஜ் வாழ்ந்த தி.நகர், திருமலைச் சாலை இல்லத்திற்கு வந்து அவரது பெருமைகள் குறித்து மேலும் அறிந்துகொள்வது போன்ற காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், காமராஜரின் பால்ய பருவம் நொடியில் கடந்து, அவரது இளமை காலத்திற்கு வந்துவிடுகிறது. காமராஜர் தேச விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளுதல், அரசியலில் தனியிடம் பிடித்து முதல்வராகுதல், சாமான்ய மக்களுக்கு தொண்டாற்றுதல், அகில இந்திய அரசியலில் கிங் மேக்கராக முத்திரை பதித்தல் என காமராஜர் வாழ்வின் முக்கிய கட்டங்கள் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமராஜரின் பல்வேறு சம்பவங்களை தொகுத்து படத்திற்கு நெருக்கடி கொடுக்காமல் அவருடைய மாநில மற்றும் மத்திய அரசியல் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் பாலகிருஷ்ணன். படத்தில் பெரும் பங்காற்றியிருப்பது ரிச்சர்ட் மதுரத்தின் திறமையான நடிப்புதான். ‘நான்தான் காமராஜர்’ என்று அசல் காமராஜரே நேரில் வந்து நம்ப சொன்னாலும், சந்தேகத்துடன் பார்க்க வைக்கும் அளவிற்கு யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார் ரிச்சர்ட் மதுரம்.  இவருக்கு கொடுக்கும் பாராட்டில் சரி பாதியை எம்.எஸ்.பாஸ்கருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்தான் ரிச்சர்ட் மதுரத்திற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இவரது குரல் ரிச்சர்ட் மதுரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

குறைவான நிதியை வைத்துக் கொண்டு ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதென்பது சவாலான விஷயம். அதில் பெருமளவுக்கு ஜெயித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு முக்கிய காரணம் காமராஜ் என்ற மாமனிதர் வாழ்ந்த எளிய வாழ்க்கைதான் என்றால் அது மிகையல்ல. சிறு பட்ஜெட் படங்களில் ஒளிப்பதிவுதான் மிகப்பெரிய சொதப்பலாக இருக்கும். ஆனால், இதில், ரெங்கசாமியின் கேமரா தன் கடமையை பக்குவமாய் கையாண்டிருக்கிறது.

இரண்டு மணி நேர திரைப்படத்தின் கதையை ஒரே பாடலில் சொல்வதென்பது தனிக்கலைதான். இந்த படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் ‘நாடு பார்த்ததுண்டா’ என்ற பாடலில் காமராஜ் படத்தின் சாராம்சத்தை இளையராஜா தன் குரலால் அழகாக பதிவு செய்திருக்கிறார். அவரது குரலில் இந்த பாடலை நாம் கேட்கும்போது நெஞ்சம் ஈரமாகி, மௌனம் காக்க வைக்கிறது. ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில நிமிட பாடல் மூலம் ஆழமாய் பதிய வைப்பதென்பது கோடியில் ஒருவருக்கே சாத்தியம். நம் இசைஞானி கோடியில் ஒருவர்.

சொந்தமாய் வீடில்லை.. வாகனமில்லை... வங்கி கணக்கில்லை... அலமாரியில் அவர் விட்டுச் சென்றது வெறும் 110 ரூபாய்தான். அதுகூட தனது தாயின் செலவுக்கோ, அல்லது ஏழையின் துயர் துடைக்கவோ வைத்திருந்த பணமாய் இருந்திருக்கக்கூடும். வீட்டை விட நாட்டிற்கே உழைக்க துடித்த உத்தமன். இப்படியும் ஒரு அதிசய பிறவி தமிழகத்தை ஆண்டார் என்பதை இன்றைய தலைமுறைக்கு சிறப்பாய் எடுத்துச் சொல்லியிருக்கிறது இப்படம்.

மொத்தத்தில் ‘காமராஜ்’ கிங் மேக்கர். இதுவரை காமராஜரைப் பற்றி அறியாத இன்றைய இளம் தலைமுறைகள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News