கருர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சந்திப்பு!.. தனித்தனி அறைகளில் பேசிய விஜய்!...
கரூரில் நடந்த துயர சம்பவம் தவெகவின் அரசியல் நடவடிக்கைகளை கடந்த ஒரு மாத காலமாகவே முடக்கிப் போட்டிருந்தது. விஜயை நேரில் பார்க்கும் ஆவலில் பல ஆயிரம் மக்கள் கூடிவிட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் வரை உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தின் போது விஜய் அங்கிருந்து கிளம்பி திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை சென்று விட்டார். அதோடு பாதிக்கப்பட்ட மக்களை தவெக நிர்வாகிகளும் சந்திக்க செல்லவில்லை. இதை கையிலெடுத்து விஜய் மற்றும் தவெகவினர் மீது திமுக ஆதவாளர்களும், திமுகவினரும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள்.ஒரு பக்கம் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சென்று சந்திக்காமல் இருந்ததும் பெரும் பேசுபொருளாக மாறியது. தவெக சார்பில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணமோ அது நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில் விஜய் தனது முடிவை மாற்றிக் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி அவர்களில் 37 குடும்பத்தினர் நேற்று பேருந்து மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை 10 மணி அளவில் விஜய் அங்கு சென்று 37 குடும்பங்களை சேர்ந்த 235 பேரிடம் தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டிருக்கிறார்.

அப்போது அவர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை, குடும்பத்தில் ஒருவரை இழந்ததால் ஏற்பட்ட சிக்கல், கல்வி, திருமணம், ஆரோக்கியம், வேலை வாய்ப்பு தொடர்பான பல தேவைகளை விஜயிடம் சொன்னதாக தெரிகிறது. அதற்கு ‘எதற்கும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன். தவெக உங்கள் பக்கம் நிற்கும். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் தவெக செய்து கொடுக்கும்’ என விஜய் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.
