×

கர்ணன் கொடியன்குளம் சர்ச்சை - பஞ்சாயாத்தை தீர்த்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

 
கர்ணன் கொடியன்குளம் சர்ச்சை - பஞ்சாயாத்தை தீர்த்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டை பெற்றுள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேநேரம், இப்படம் 1995ம் ஆண்டு கொடியன்குளம் எனும் இடத்தில் நடந்த கலவரத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது.

ஆனால், திரைப்படத்தில் 1997ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெறுவதாக காட்டப்படுகிறது. அப்போது கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடந்து வந்தது. எனவே, சமூக வலைத்தளங்களில் திமுகவினர் இதை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், இது வரலாற்று பிழையாக மாறிவிடும் எனவும் எச்சரித்தனர். எனவே, இதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கமளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.’என பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன’ எனவும் டிவிட் செய்துள்ளார்.

இதையடுத்து இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News