Categories: latest news throwback stories

வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!

கவிஞர் வாலி காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு பாடல்கள் எழுதுவதில் வல்லவர். அதனால் தான் அவர் வயதானாலும் அவரது பாடல்கள் என்றும் இளமையாகவே உள்ளன. அந்த ஒரே காரணத்திற்காக அதாவது இன்றைய இளைஞர்களையும் கவரும் விதத்தில் அவரது பாடல்கள் இருப்பதால் வாலிபக்கவிஞர் வாலி என்று அழைக்கப்பட்டார்.

அப்பேர்ப்பட்ட வாலி ஒரு முறை விழா ஒன்றில் ஆச்சரியமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அதாவது 1970ல் எம்ஜிஆர் நடித்த எங்கள் தங்கம் படத்துக்காகப் பாடல் எழுதிக் கொண்டு இருந்தாராம். படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு. தயாரிப்பாளர் முரசொலி மாறன். எம்எஸ்வி தான் இசை அமைப்பாளர். அது ஒரு காதல் பாடல். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாடுவது போன்ற அருமையான பாடல்.

அதற்கு எம்எஸ்வி. டியூன் போடுகிறார். ‘நா தன நான தனன்னனா…’ என்று போட்டு விட்டு கவிஞர் வாலியைப் பார்க்கிறார். பாடலின் முதல் வரியை சட்டென்று சொல்கிறார். ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று. ‘ஆஹா…. சூப்பர்’ என அங்கிருந்தவர்கள் எல்லாரும் வாலியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். உடனே அடுத்து என்ன வரிகள் போடுவாரோ என ஆவலுடன் அனைவரும் அவரையேப் பார்க்கின்றனர்.

அவருக்கு வார்த்தைகள் ஒன்றும் பிடிபடவில்லை. நீண்ட நேரமாக எதை எதையோ யோசித்தபடி வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வெற்றிடத்தையே வெறித்துப் பார்க்கிறார். ஏனெனில் முதல் வரி முந்திக் கொண்டு வந்ததைப் போல அவருக்கு அடுத்த வரிகள் வரவில்லை. எல்லாரும் அவரையே பார்க்கிறார்கள். அதனால் தான் வரவில்லையோ என்னவோ..?

Engal Thangam

வழக்கமாக அவருக்கு வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டும். ஆனால் ஏனோ அன்று வார்த்தைகள் தட்டுத் தடுமாறித் தான் போனது. என்ன ஆச்சு என்று எம்எஸ்வி. ஆர்மோனியப் பெட்டியில் கைவைத்த படி வாலியைப் பார்த்துக் கேட்கிறார்.

அந்த நேரம் பார்த்து அங்கு கருணாநிதி வருகிறார். சொந்தத் தயாரிப்பு அல்லவா? என்ன சூழ்நிலை என்று உற்று நோக்குகிறார். அதன்பிறகு ‘என்னய்யா வாலி பாட்டு எழுதியாச்சா’ன்னு கேட்கிறார். ‘அதைத் தாங்க யோசிச்சிக்கிட்டு இருக்கேன்’னு சொல்றார் வாலி. ‘முதல் வரியைச் சொல்லுங்க’ன்னு கேட்கிறார்.

‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்கிறார். கருணாநிதி உடனடியாக அடுத்த வரியைப் போடுகிறார். ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’. ‘அட அட அட அட… இதைத் தாங்க இவ்ளோ நேரமா யோசிச்சிக்கிட்டு இருந்தேன்’னு சொல்வதைப் போல வாலி அவரை ஆச்சரியமாகப் பார்க்கிறார்.

அந்த வரி எல்லாருக்குமே பிடித்து விடுகிறது. எம்ஜிஆருக்கு இதை விடப் பொருத்தமாக எழுத முடியாதுன்னு அந்த மேடையிலேயே வாலி சொல்லச் சொல்ல கைதட்டலால் அரங்கம் அதிர்கிறது. அது மட்டுமல்லாமல் கருணாநிதிக்கு அரசியலில் கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரது பேச்சும், எழுத்தும் அனைவரையும் கவரக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v