Categories: Cinema News latest news throwback stories

வாலிக்கு பாயாசம் கொடுத்து பாட்டு வாங்கிய எம்.ஜி.ஆர்!.. சூப்பர்ஹிட் பாடல் உருவான கதை இதுதான்!…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் காலம் முதல் அஜித் வரை எல்லோருக்கும் பாடல் எழுதியவர். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பல ரம்மியமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். அதேபோல் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கும் பல படங்களில் அற்புதமான பாடல்களை எழுதியவர் வாலி.

vali

கவிஞர்களும், பாடலாசிரியகளும் எப்போதும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் அவர்களிடம் சொல்லும் ஒரு விஷயத்தை கூட தேவைப்படும்போது பாடல்களில் புகுத்திவிடுவார்கள். இதில் கை கேர்ந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவர் எழுதிய பல தத்துவ பாடல்கள் அப்படி உருவானதுதான். அதுபோல், கவிஞர் வாலியும் அப்படி சில பாடல்களை எழுதியுள்ளார்.

vali

எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி படத்தில் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலிதான். இந்த படத்தில் ஒரு பாடல் எழுதுவதற்காக அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார் வாலி. ஆனால், எவ்வளவு யோசித்தும் வாலிக்கு வார்த்தைகள் சிக்கவில்லை. அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் ‘என்ன கவிஞரே பாட்டு வந்துச்சா?’ என கேட்க, வாலியோ ‘வார்த்தைகள் சிக்கவில்லை’ என்றாராம். உடனே, கையிலிருந்த அவில் பாயாசத்தை அவரிடம் கொடுத்து இதை குடித்துவிட்டு யோசியுங்கள் என சொல்லிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாரம்.

வாலி அந்த பாயாசத்தை குடித்துவிட்டு வெளியே வந்து அங்கிருந்த படக்குழுவினர் சிலரிடம் ‘நீங்கள் பாயாசம் சாப்பிட்டீர்களா?’ என கேட்க, அவர்கள் ‘எம்.ஜி.ஆர் பாயாசத்தை உங்களுக்கு மட்டுமா கொடுத்தார். எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்’ என சொல்ல வாலிக்கு பொறி தட்டியது. உடனே எம்.ஜி.ஆரிடம் அந்த வரிகளை சொல்ல அவருக்கும் பிடித்துப்போனது. அப்படி வாலி எழுதிய பாடல்தான் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான். ஒருவருக்கா கொடுத்தான் இல்லை.. ஊருக்காக கொடுத்தான்’ என்கிற சூப்பர் ஹிட் பாடல்.

பாயாசத்தை வச்சி பாட்டு எழுதின வாலி பலே கில்லாடிதான்!..

Published by
சிவா