இமயம் சரிந்துவிட்டதே!.. கதறிய வடிவேலு.. பாரதிராஜா சொந்த ஊரில் இறுதி மரியாதை
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வைகப்புயல் வடிவேலு அஞ்சலி செலுத்த வந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
பாரதிராஜாவும் வடிவேலுவும் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக கிழக்கு சீமையிலே, பசும்பொன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். கிராமிய கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கிய பாரதிராஜா, தனது படங்களில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரங்களை வழங்கி அவரது திறமையை வெளிக்கொணர உதவிய இயக்குநர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார்.
பல மேடைகளில் பாரதிராஜா குறித்து பேசியுள்ள வடிவேலு, அவரை தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த நபராக குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் அவரது மறைவு செய்தி வடிவேலுவை மிகவும் பாதித்ததாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், நடிகர் வடிவேலுவும் நேரில் வந்து பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது நீண்டநாள் நண்பரும், வழிகாட்டியுமான பாரதிராஜாவின் உடலை பார்த்தவுடன் வடிவேலு உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்து வருகிறது.
பாரதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுவின் கண்ணீர் அஞ்சலி, இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
