தவெகவின் கேலிக்குரிய செயல்கள் ; விஜய்க்கு அவமானகரமான தோல்வி! - வெளிப்படையாக விமர்சித்த பிஸ்மி
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. மக்களின் நீண்டகால மனக்குமுறலுக்கு ஒரு வெளிச்சமாக, மாற்று அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக தவெக இருக்கும் என பலரும் நம்பினர். 2006ம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது இருந்த எழுச்சி த்ற்போதும் மக்களிடையே காண முடிந்தது. விஜய் பிரச்சாரத்திற்காகச் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கட்டுகடங்காமல் கூடுகிறது. இணையத்திலும் பொது வெளியிலும் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைக் கழுவி ஊற்றினாலும், பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவே பேசி வந்தார். ஆனால், தற்போது அவரே விஜய்க்கு இந்த தேர்தலில் அவமானகரமான தோல்வியே கிடைக்கும் என வெளிப்படையாக விமர்சித்திருப்பது அரசியல் களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தவெக-வின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ள வலைப்பேச்சு பிஸ்மி, இந்தத் தேர்தலில் பெரிய அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அனைவரும் நம்பினார்கள். நான் கூட அதை நம்பினேன். ஆனால் இன்று விஜய்யின் செயல்பாடுகளைப் பார்க்கையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக, இந்த பிரச்சாரக் களத்தில் தவெக தரப்பில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் கேலிக்குரியதாகவே இருக்கிறது என கூறினார்.
தவெகவினர் முதலில் கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கின்றனர். அனுமதியும் கிடைக்கிறது. ஆனால், திடீரென புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுவதைக் காரணம் காட்டி ரத்து செய்கிறோம் என்கின்றனர். அனுமதி கேட்கும் முன்பே புதுச்சேரி தேர்தல் தேதி உங்களுக்குத் தெரியாதா?" விஜய் கட்சியினருக்கு ஒரு தொலை நோக்கு பார்வையே கிடையாது.
மேலும், தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், சும்மா ஒரு 4 தொகுதிகளுக்குச் சென்றுவிட்டு மேடையில் ஸ்டாலின் சார் எனப் பேசிவிட்டால் மட்டும் உங்களுக்கு ஓட்டு கிடைத்துவிடுமா? இதைவிடப் பெரிய அவமானம் என்னவென்றால், உங்களுடைய வேட்பாளர்களுக்கு வேட்பு மனுவைக் கூட சரியாகப் பூர்த்தி செய்யத் தெரியவில்லை. இது எவ்வளவு பெரிய பின்னடைவு, அவமானம் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தத் தேர்தலில் தவெக-விற்கு வெற்றி கிடைக்காது என்பதையும், ஒரு அவமானகரமான தோல்வி கிடைக்கப் போகிறது என்பதையும் விஜய் ஓரளவு உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தோல்விக்கு அவர்களுக்குச் சரியான காரணங்கள் வேண்டும். அதற்காகத்தான் திட்டமிட்டு பிரச்சாரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. நாளை தேர்தலில் தோற்ற பிறகு, திமுகவினர் எங்களைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்துவிட்டனர், எங்களால் நினைத்த மாதிரி பிரச்சாரம் செய்ய முடியவில்லை, அதனால்தான் நாங்கள் ஜெயிக்கவில்லை என்ற ஒரு டெம்ப்ளேட்டைத் தயார் செய்வார்கள். அதற்கான விஷயமாகத்தான் இவையெல்லாம் நடக்கிறது என பிஸ்மி தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாகவே பேசி வந்த வலைப்பேச்சு பிஸ்மியே, தவெகவின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருப்பது, இணையத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
