பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய ‘விடாமுயற்சி’.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைக்கா
லைக்கா திடீர் அறிவிப்பு:
விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என லைக்கா நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த ஒரு செய்தி தான் இப்போது பரபரப்பாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது .அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் திரைப்படம் வெளியாகிறது.
அதனால் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெருமளவு ஆர்வமாக காத்திருந்தனர். ஆரம்பத்திலிருந்து இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தன. எப்படியோ ஒரு வழியாக படப்பிடிப்பு எல்லாம் முடிந்து சமீபத்தில் தான் அஜித்தும் டப்பிங் வேலைகளையும் முடித்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சென்சார் நடக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் படம் சென்சாருக்கு போகவில்லை. அதிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருமா வராதா என்ற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தன. ஆனால் இதைப் பற்றி லைக்கா நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் திடீரென இன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷாக் கொடுத்த லைக்கா:
மேலும் இந்த அறிவிப்போடு அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது லைக்கா நிறுவனம். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் படத்தின் டீசர் சிலர் தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. அதில் ஜனவரி 10ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தார்கள் .
அதிலிருந்தே அஜித் ரசிகர்கள் குதூகலத்தில் இருந்தனர். இந்த வருடமும் தல பொங்கல் தான் என உற்சாகத்தில் இருந்து வந்தனர். இதை மேலும் குதூகலப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான சவதீகா பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களை துள்ளலாட வைத்தது. அதுவும் அஜித் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அந்த பாடலில் ஆடியது திரையில் எப்பொழுது பார்க்க போகிறோம் என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது .
புத்தாண்டு கிஃப்ட்:
ஆனால் லைக்காவின் இந்த திடீர் அறிவிப்பு ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சுக்கு நூறாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் புது வருடப் பிறப்பில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் தள்ளிப்போவதாக ஒரு ஷாக்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறது லைக்கா நிறுவனம்.