Categories: latest news throwback stories

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இதை செய்ய சிம்புதான் காரணமாம்? அடங்கம்மா!

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு இன்னொரு பிரபலமான முகமும் இருக்கிறது. அதுதான், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன். அவரின் பாடல் வரிகளில் காதல் வழிந்தோடும், குடும்பத்தின் அன்பைப் பொழியும் அதேநேரத்தில் மாஸ் வரிகளையும் அவர் எழுதியிருக்கிறார். 

போடா போடி கதையை தயார் செய்ததும் அவர் முதலில் இசையமைப்பாளர் தரணைத்தான் சந்தித்திருக்கிறார். அவர் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு ஒரு குறும்படத்தை எடுத்து, ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்திடம் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்து சிம்புவை நாயகனாக வைத்து படத்தைத் தயாரிக்க ஜெமினி நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து அவரின் இயக்கத்தில் 2012-ல் வெளியான போடா போடி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் ஆந்தாலஜியில் ஒரு படம், காத்துவாக்குல ரெண்டு காதல் என கோடம்பாக்கத்தில் இளம் இயக்குநர்களில் முக்கியமானவராக மாறிப்போனார்.

இவரின் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப், எஸ்.ஜே.சூர்யா நடிக்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாராவைத் திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்கள். 

இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராகவும் விக்னேஷ் சிவன் இருக்கிறார். அஜித்தின் அதாரு அதாரு, நாங்க வேற மாறி – விஜய்யின் அந்த கண்ண பாத்தாக்க, சிவகார்த்திகேயனின் எங்க அண்ணன், பே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களின் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்தான்.

போடா போடிக்கு முன்னாலேயே பிரபலமான ஹிட் பாடல்களுக்கு இவராக சொந்த வரிகளைப் போட்டு பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். போடா போடி சமயத்தில் இதைக் கவனித்த சிம்பு, அவர் எழுதிய பாடலில் சில வார்த்தைகளைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். 

அப்படி இவர் எழுதிய வரிகள் சிம்புவுக்குப் பிடித்துப் போகவே, `நீயே ஏன் பாடல் எழுதக் கூடாது?’ என்று ஊக்கப்படுத்தியிருக்கிறார். இதையடுத்தே, போடா போடி படத்தில் மாட்டிக்கிட்டேனே உள்பட 3 பாடல்களை எழுதினாராம் விக்னேஷ் சிவன். அவரின் பாடலாசிரியர் பயணம் சிம்புவின் ஊக்குவிப்பால்தான் நடந்திருக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily