விமர்சனத்தில் பாராட்டு!.. ஆனால் வசூலில் தடுமாறும் அப்பா குட்டி
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அப்பா குட்டி . இரவுக்கு ஆயிரம் கண்கள் , கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும், குழந்தை நட்சத்திரம் லிதன்யா, பகவதி பெருமாள், முருகானந்தம், அருவி மதன், ஹரிப்ரியா இசை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை - மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் தந்தையாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். மகளைப் பாதுகாக்க அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை செண்டிமெண்ட் கலந்து கொடுத்துள்ளார் மு. மாறன்.
நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. குறிப்பாக, விஜய் ஆண்டனி மற்றும் குழந்தை நட்சத்திரம் லிதன்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. தந்தை - மகள் இடையேயான பாசக் காட்சிகளும், இரண்டாம் பாதியில் இடம்பெறும் உணர்ச்சிகரமான சம்பவங்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், அப்பா குட்டி படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் 551 காட்சிகளில் திரையிடப்பட்ட அப்பா குட்டி திரைப்படம் முதல் நாளில் ரூ.30 லட்சம் நிகர வசூலைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.34 லட்சமாக உள்ளது. ஒரு காட்சிக்கு சராசரியாக ரூ.5,445 வசூலாகியுள்ளது. வெளிநாட்டு வசூல் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், முதல் நாள் வசூலில் அப்பா குட்டி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வார இறுதி நாட்களில் குடும்ப ரசிகர்களின் வருகை அதிகரித்தால் படத்தின் வசூலும் உயர வாய்ப்புள்ளது.
