ஒன்றரை வயது பிஞ்சுக் குழந்தையை அம்மாவே கொன்ற கொடுமை.. விஜய் ஆண்டனி வேதனை
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் உணவு தொண்டையில் சிக்கியதால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் வெளிவந்த தகவல்கள் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண், தனது ஒன்றரை வயது குழந்தை உணவு சிக்கியதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் குழந்தையின் உடலில் பல்வேறு உள்காயங்கள் இருந்ததும், உடலின் சில பகுதிகளில் சிகரெட் கொண்டு சுடப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையின் தாய் அகிலா மற்றும் கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு அறிமுகமான அக்ஷர் என்ற ஆண் நண்பர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை மீது நீண்ட காலமாக கொடுமை நடத்தப்பட்டதா, உயிரிழப்பிற்கு முன்பு என்ன நடந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் அண்டனி சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தையின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஆன்மா சாந்தியடையட்டும், தங்கம். நெஞ்சை நொறுக்கும் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒரு நிகழ்வு, நீ பெரிதும் அன்புடன் நினைவுகூறப்படுவாய் என பதிவிட்டுள்ளார்.
