Jana Nayagan : ஓப்பனிங் வீக்கெண்டுக்கான ப்ரீ-புக்கிங்கிலேயே 100 கோடியை நெருங்கியதா விஜய்யின் 'ஜன நாயகன்'?
தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' இன்று (ஜூலை 23) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 'சதுரங்க வேட்டை' இயக்குநர் ஹெச்.வினோத் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் இதுவரைக்கும் எந்த படமும் சந்திக்காத பல பிரச்சனைகளை சந்தித்தது. அதுவும் ஒரு முன்னணி ஹீரோ படத்துக்கே இப்படியா? என்று திரையுலகினருக்கே பல சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்சார் பிரச்சனை, ரிலீஸ் ஒத்தி வைப்பு, அடுத்து முழு படமும் லீக் ஆனது வரை இப்போது நினைத்து பார்க்கையில், ரசிகர்களை இத்தனை ஆண்டுகள் தனது படங்களால் மகிழ்ச்சிப்படுத்திய விஜய்யின் கடைசி படத்துக்கு இப்படி நிகழ்ந்திருக்க கூடாது என்று தான் தோன்றுகிறது.
இன்று காலை 6 மணிக்கே முதல் ஷோ ஆரம்பமாகி விட்டது. 'இளைய தளபதி', 'தளபதி' என்று இதுவரை வந்த டைட்டில் கார்டுக்கு பதிலாக 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி' ச.ஜோசப் விஜய் என்று வந்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. தற்போது, இந்த படம் ஓப்பனிங் வீக்கெண்டுக்கான (ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை) ப்ரீ-புக்கிங்கிலேயே உலக அளவில் 98 கோடி வரை கல்லா கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
