
Cinema News
ரஜினிக்கு வாழ்த்து சொல்லலயே!.. சொன்னது என்னாச்சி விஜய்?.. வைரலாகும் போஸ்டர்!..
Rajini Vijay; ரஜினியை பார்த்து வளர்ந்தவர்தான் நடிகர் விஜய். விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் படம் எடுத்த போது விஜய் பள்ளிக்கு போகும் சிறுவனாக இருந்தார். அந்த படப்பிடிப்பில் அவர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போதும் கூகுளில் இருக்கிறது.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவே வளர்ந்தவர்தான் விஜய். அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போது அவர் நடிக்கும் படங்களில் ரஜினியை துதி பாடி பாடல் வரிகள் வரும். ரஜினி பட போஸ்டரை ஒட்டி அதன் முன் விஜய் பாடுவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் வளர்ந்த பின் தனது படங்களில் ரஜினி ரெஃப்ரன்ஸ் வைப்பதை நிறுத்திக்கொண்டார். அதேநேரம் தனது நண்பர்களுடனும் இயக்குனர்களுடன் ரஜினி பற்றி பேசும்போது ‘தலைவர்’ என்று குறிப்பிடுவார் விஜய்.

மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கிய போது ’நீ தலைவரை வைத்து ஒரு படம் எடு’ என சொன்னவர் விஜய். அதேபோல் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கிய போது அவரிடமும் அதையே சொன்னார். ஆனால் ஜெயிலர் பட ஆடியோ விழாவில் பேசிய ரஜினி காக்கா கழுகு கதையை சொல்ல ‘காக்கா’ என விஜயைத்தான் சொல்கிறார் என விஜய் ரசிகர்கள் புரிந்து கொண்டு ரஜினியை இப்போது வரை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ரஜினியின் படங்கள் வெளியாகும் போதும் அந்தப் படத்திற்கு எதிராக வன்மத்தை கட்சி வருகிறார்கள். கூலி படம் வெளியான போதும் ’படம் நன்றாக இல்லை’.. ‘படம் வேஸ்ட்’..’ மொக்கை’ என்றெல்லாம் தியேட்டருக்கு முன் நின்று பேட்டி கொடுத்தார்கள். மேலும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு எதிராக இப்போதும் பேசி வருகிறார்கள்.
நடிகர் ரஜினி சினிமாவிற்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே கடந்த 13ஆம் தேதியே ரஜினிக்கு திரையுலகினரும், பல அரசியல் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி, ரஜினியின் நண்பர் கமல்ஹாசன், இதுபோக பல சினிமா பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் நடிகராக இருந்து அரசியலுக்குப் போன விஜய் இதுவரை ரஜினிக்கு எந்த வாழ்த்தும் சொல்லவில்லை.

ரஜினி சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனபோது அது தொடர்பாக வாழ்த்து செய்தியை வெளியிட்ட விஜய் ‘தலைவா திரையுலகில் நீ கால் பதித்து இது 25 ஆவது ஆண்டு.. உன்னுடைய 50வது ஆண்டு திரையுலக வாழ்க்கையிலும் இதேபோல பூச்செண்டு கொடுத்து மகிழ இறைவனை வேண்டுகிறேன்.. பிரியமுடன் உங்கள் ரசிகன் விஜய்’ என வாழ்த்து சொல்லியிருந்தார். அந்த போஸ்டரை இப்போது பலரும் பகிர்ந்து ‘சொன்னது என்னாச்சு விஜய்? ரஜினிக்கு இதுவரை நீங்கள் வாழ்த்து சொல்லலையே’ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.