தீபாவளிக்கு 200 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய விஜய் சேதுபதி...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள விஜய் சேதுபதி, சமூக நலப் பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தொடர்ந்து பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , சூது கவ்வும் , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , விக்ரம் வேதா , 96, சூப்பர் டீலக்ஸ் ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய திரைப்பட விருதையும் பெற்றார். மாஸ்டர் , விக்ரம் , ஜவான் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக, சென்னையில் தேவையுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளைப் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆய்குடியில் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விஜய் சேதுபதி, துளி அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. தீபாவளிப் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக 200 முதியோர் மற்றும் குழந்தைகளுக்குப் புத்தாடைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதியோரும் குழந்தைகளும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
vijay-sethupathi-diwali-gifts-200-people-ayikudi-tenkasi
