விஜய் சேதுபதி – மகிழ் திருமேனி கூட்டணிக்கு சிக்கல்!.. ரூ.60 கோடி பட்ஜெட்தான் காரணமா?
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரில்லர் படங்களை இயக்குவதில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மகிழ் திருமேனி. முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து தடையறத் தாக்க , மீகாமன் , தடம் , கலகத் தலைவன் , விடாமுயற்சி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் அஜித் நடிப்பில் இவர் இயக்கிய விடா முயற்சி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியாகி அட்டர் பிளாப் ஆகி மகிழ்திருமேனிடின் மார்க்கெட்டையும் காலில் செய்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் இவர் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழ் படமல்ல. இந்தியில் இவர்கள் இணைகிறார்கள்.
தமிழ் சினிமாவைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இந்தியில் ஷாஹித் கபூருடன் இணைந்து ஃபர்ஸி வெப் தொடரில் நடித்திருந்தார். தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின்னர் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
இந்நிலையில், விஜய் சேதுபதியிடம் இந்திப் படம் ஒன்றிற்கான கதையை மகிழ் திருமேனி கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் உருவாகும் இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆனால், இப்படத்தை உருவாக்க சுமார் ரூ.60 கோடி பட்ஜெட் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இந்தியில் பிரபலமான நடிகராக இருந்தாலும், தனி கதாநாயகனாக அவருக்கான பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட் இன்னும் வலுவாக அமையவில்லை என்பதால், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்யத் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைத்து, தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கும் முயற்சியில் மகிழ் திருமேனி இறங்கியுள்ளாராம். இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
