கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதியா?.. கைநழுவிப் போன சூப்பர் ஹிட் படம்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கிய திரைப்படம்தான் கைதி .
2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், தீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். விஜய்யின் பிகில் படத்துடன் போட்டியாக வெளியான கைதி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கதாநாயகி, காதல் காட்சிகள், பாடல்கள் என வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் உருவான இப்படத்தின் கதை ஒரே இரவில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டிருந்தது. சிறையிலிருந்து வெளியே வரும் டில்லி, தனது மகளைச் சந்திக்கச் செல்லும் வழியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் கதைக்களம்.
கார்த்தியின் அற்புதமான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவர்ஸுக்கும் (LCU) இப்படம்தான் அடித்தளமாக அமைந்தது. மேலும், தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், கைதி படத்தில் முதன்முதலில் நடிக்க வாய்ப்பு வந்தது விஜய் சேதுபதிக்குத்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறுகையில், கார்த்தி அந்தப் படத்தில் நடிக்க வந்தபோது லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்து விஷயத்தைச் சொன்னதாகவும், தானும் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், லோகேஷ் தனக்குச் சகோதரர் போன்றவர் என்பதால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் எந்த வருத்தமும் இல்லை என்றும், கதையைக் கேட்டபோதே இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது தனக்குத் தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது கையை விட்டுச் சென்ற ஒரே படம் கைதிதான் என்றும் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
