ரேனிகுண்டா 2 ரெடி!.. விஜய் சேதுபதி வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்!..
கோலிவுட்டை ஒரு காலத்தில் மிரட்டிய கேங்ஸ்டர் படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ரேனிகுண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில், ரேனிகுண்டா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேனிகுண்டா திரைப்படம் அதன் வித்தியாசமான கதைக்களம், யதார்த்தமான காட்சிப்படுத்தல் மற்றும் இளைஞர்களின் நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் பின்னணியில் ரேனிகுண்டா-2 உருவாகி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ஆர். பன்னீர்செல்வமே இந்த படத்தையும் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். முதல் பாகத்தில் நடித்த ஜானி, நிஷாந்த், சந்தீப் உள்ளிட்ட பலரும் மீண்டும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஷாலினி நிவாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மறைந்த மலையாள நடிகர் திலகனின் பேரன் அபிமன்யு திலகன் இந்த படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
தற்போது ரேனிகுண்டா-2 திரைப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள காட்சிகள், பின்னணி வேலைகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த போஸ்டர்கள் மற்றும் முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவுள்ள ரேனிகுண்டா-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் ரசிகர்களிடையே வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
