விஜய் சேதுபதிக்காக கொம்பன் முத்தையாவின் கதையை இயக்கும் பாலா..
தமிழ் சினிமாவில் வித்யாசமான படைப்புகளைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பாலா. மனிதர்களின் உணர்வுகளையும், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும் தனது திரைப்படங்களில் யதார்த்தமாகப் பதிவு செய்து வருபவர்.
விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் ஏனோ இவர் இயக்கிய கடசி சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பாலா தனது அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் பாலா ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடல் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையாவின் கதைக்குத் திரைக்கதை அமைத்து இயக்கும் பணியை மட்டும் பாலா மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாலாவும், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் விஜய் சேதுபதியும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
