×

அரசியல் கட்சி தலைவர், நடிகர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ்.
 
vijayakanth

கேப்டன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டுடாடுகிறார். இந்த நாளில் அவரின் திரையுலக பயணத்தையும், அவர் குறித்த சில தகவல்களையும் சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு. 

vijayakanth

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார். ஆனால் முதல் படம் அவருக்கு இனிமையை தரவில்லை. அடுத்தடுத்த படங்களின் நிலையும் இதேதான். ஆனால், விஜயகாந்த் சோர்ந்துப்போகவில்லை. தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்தார்.

vijayakanth-882524-1599232599

கே.விஜயன் இயக்கத்தில் சலீல் சவுத்ரி இசையில் விஜயகாந்த் நடித்த "தூரத்து இடி முழக்கம்", பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்பு, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை" பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் பின்பு, இராம.நாராயணன் இயக்கிய "சிவப்பு மல்லி"யும் ஹிட். அப்போதுதான் விஜயகாந்தின் திரையுலக கிராஃப் ஏற ஆரம்பித்தது. 

1980-கள் ரஜினி, கமல் என திரையுலகத்தை கோலோச்சிய காலம். இவர்களின் கால்ஷீட் கிடைக்காத சிறு தயாரிப்பாளர்கள் அடுத்து நாடியது விஜயகாந்தைதான். வெற்றித் தோல்வி என சரிபாதியாகவே அவர் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தது.

விஜயகாந்த் என்றால் கோபப்படுபவர் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், நண்பர்களை எப்போதும் மறக்காதவர். அவரால் உயர்ந்த தயாரிப்பாளர்கள் பிற்காலத்தில் தாழ்ந்தபோதும் தூக்கிப் பிடித்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகக் கூட ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் தன் வீடு தேடி உதவிக் கேட்டு வரும் ஏழை மக்களுக்கு உதவியவர். 

captain-vijayakanth-tamil-nadu-1200

தியேட்டர் அதிபர்கள் இப்போதும் கொண்டாடும் வசூல் சக்கரவர்த்தி விஜயகாந்த். இப்போதும், தமிழகத்தில் ஏதோ கிராமத்தில் விஜயகாந்தின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் வசூல் கொடுக்கும் என்பது தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை. விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், அதன் காரணமாகவே தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.

சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகம் கிட்டதட்ட சினிமா துறை சார்ந்தவர்களுக்கு ஒரு அன்னசத்திரமாகவே திகழ்ந்தது. எப்போது யார் வேண்டுமானாலும் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலை இருந்தது. இன்றளவும் அந்த காலத்தில் சினிமா வாய்ப்பு தேடி முயற்சித்த காலத்தில் விஜய்காந்த் அலுவலகம் எப்படி தங்களுக்கு பசியாற்றியது என்று பலரும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள். 

அரசியல் அவருக்கு சில கசப்பான பாடங்களை கற்றுக்கொடுத்தாலும் ஒரு மனிதனாக, நல்ல நடிகனாக இன்றளவும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து நிற்கும் கேப்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News