Categories: latest news

மதுபோதையில் பாரில் அலப்பறை – டாடி ஆறுமுகம் மகனை தேடும் போலீசார்

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மகன் கோபிநாத். Village food factory எனும் யுடியூப் சேனலை துவங்கி அதில் தனது தந்தையை சமைக்க வைத்து வீடியோ எடுத்து மாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.

கிராமத்து பின்னணியில் விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருப்பவர் ஆறுமுகம். இவர் சமையல் செய்யும் வீடியோ சன் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து ஒளிபரபப்பாகி வந்தது. பீட்சா முதல் பிரியாணி வரை அனைத்து சமையல்களையும் கிராமத்து ஸ்டலில் திறந்த வெளி இடத்தில் சமைத்து அசத்துவார் ஆறுமுகம். யுடியூப் மூலம் வந்த வருமானத்தை வைத்து சில கோடிகள் வரை சம்பாதித்துள்ளார் அவரின் மகன் கோபிநாத். மேலும் புதுச்சேரியில் டாடி ஆறுமுகம் என்கிற பெயரில் 3 ஹோட்டலையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஏ.கே.டார்வின் என்கிற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பாரும் செயல்பட்டு வருகிறது. அங்கு 8 மணிக்கு சென்ற அவர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். 2 சுற்று சரக்கு உள்ளே சென்றதும் பார் ஊழியரை அழைத்து திட்டுவது, மிரட்டுவது என அலப்பறை செய்துள்ளார் கோபிநாத். மேலும் 11 மணி ஆன பின்பும் மது கேட்டு அடம்பிடித்துள்ளார்.

11 மணிக்கு மேல் மது வழங்க மாட்டோம் என ஊழியர் கூற, ‘நான் டாடி ஆறுமுகத்தின் மகன்.. எனக்கே சரக்கு இல்லையா?’ என அவரிடம் வாக்கு செய்ததோடு, பீர் பாட்டிலை உடைத்து அவரை தாக்கவும் முயன்றுள்ளார் கோபிநாத். அதை ஊழியர் தடுத்த போது அவரின் கையில் காயமும் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த இருக்கை, பொருட்கள் என அனைத்தையும் அவரும் அவரின் நண்பர்களும் உடைத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த ஊழியர் கொடுத்த புகாரில் கோபிநாத்தின் 2 நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள கோபிநாத்தையும், அவரின் மற்றொரு நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா