பூங்கொத்து, சால்வை எல்லாம் வேஸ்ட்!.. விஜய்க்கு விஷால் கொடுத்த வொர்த்தான பரிசு!..

 
vishal

மகுடம் படத்தை இயக்கி அடுத்து ரிலீஸுக்கு தயார் செய்து வரும் நடிகர் விஷால் நேற்று திடீரென முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார், வழக்கமான மரியாதை பரிசுகளுக்கு பதிலாக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் வித்யாசமான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்காக உதவி செய்து வருகிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது பொன்னாடை, பூங்கொத்து போன்ற பாரம்பரிய பரிசுகளை வழங்குவதை தவிர்த்து, அதற்குப் பதிலாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதை தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்த விஷால், அவரது பெயரில் மூன்று மாணவிகளின் உயர்கல்விச் செலவுகளை ஏற்று நடத்த உள்ளதாக அறிவித்தார். இதற்கான விவரங்களுடன் கூடிய கடிதத்தையும் முதல்வரிடம் அவர் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், “உங்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணமும், மக்களுக்கான சேவையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பும் எண்ணற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. அதற்கான மரியாதை மற்றும் பாராட்டின் அடையாளமாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மூன்று மாணவிகளின் உயர்கல்விச் செலவுகளை உங்கள் பெயரில் ஏற்று நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு நாளில் வாடிவிடும் பூங்கொத்தை வழங்குவதை விட, ஒரு மாணவியின் கல்விக்கு ஆதரவளிப்பது அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நீண்டகால முதலீடாக அமையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜயின் பெயரில் கல்வி உதவி பெறும் மாணவிகளின் விவரங்களும் கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.

அதில், தனியொரு பெற்றோரின் ஆதரவுடன் வளர்ந்து, 12-ஆம் வகுப்பில் 437 மதிப்பெண்கள் பெற்று குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாகும் எம். லில்லி புஷ்பம் B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பிற்கும், தினக்கூலி தொழிலாளர்களின் மகளும் குடும்பத்தின் முதல் பட்டதாரியுமான எம். ஹரினி BCA படிப்பிற்கும், 12-ஆம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் உதவி வழங்கப்பட உள்ளது. மேலும், 431 மதிப்பெண்கள் பெற்று குடும்பத்தின் முதல் பட்டதாரியாக கல்லூரி பயணத்தை தொடங்கியுள்ள பி. தர்ஷினியின் B.Com (General) படிப்பிற்கான செலவுகளையும் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்டு நெகிழ்ச்சியடைந்த முதல்வர் ஜோசப் விஜய், விஷாலின் சமூகப் பணியை பாராட்டியதுடன், “உங்களின் இத்தகைய சேவை முயற்சிகள் தொடரட்டும்” என்று வாழ்த்து தெரிவித்து தனது நன்றியையும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

From Around the web