ஈகோ இல்லாத அஞ்சலி… விஷால் கொடுத்த மகுடம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
புது வசந்தம், சூர்ய வம்சம், நாட்டமை என பல வெற்றிப்படங்களை கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகி வரும் படம் மகுடம்’. விஷால் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை முதலில் ரவி அரசு இயக்குவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, ரவி அரசு விலகிக்கொள்ள, நடிகர் விஷாலே தற்போது இந்த படத்தை இயக்கி, நடித்து வருகிறார். விஷால் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஷாலுடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், யோகி பாபு, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்துள்ள விஷால், காக்கிநாடாவில் கொளுத்தும் வெயிலில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. படத்தில் மிகவும் சவாலான பகுதியாகக் கருதப்படும் 90-களின் காலக்கட்டக் காட்சிகளை அங்கு படமாக்கியுள்ளோம். இதற்காக உழைத்த ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் மற்றும் எனது உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நாளை முதல் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எவ்வித பந்தாவும், ஈகோவும் இல்லாமல் மிகவும் புரொஃபஷனலாக வேலை செய்த அன்பான நடிகை அஞ்சலி, ஜான் விஜய், ஜே.பி சார் மற்றும் கொளுத்தும் வெயிலிலும் அமைதியாக பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பின் போது எனக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் மிகவும் சோர்வடைந்து இருந்த அந்த நேரத்தில், நான் துவண்டு விடாமல் இருக்க எனக்கு மிகப்பெரிய பலமாக உடன் நின்ற எனது ஆருயிர் சாய்தன்ஷிகாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள். ஜி.வி. பிரகாஷின் மேஜிக் இசையில் எங்கள் படத்தின் முதல் சிங்கிள் பாடல் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
