Categories: Cinema News latest news throwback stories

பழைய படங்களில் உள்ள ஆழமான சுவாரசிய கதைகளம்…அர்த்தம் பொதிந்த பாடல்கள் இக்கால படங்களில் இல்லையே…ஏன்னு தெரியுமா?

கேள்வியே நமக்கு பதிலையும் சொல்லி விடுகிறது. ஆமாம். பழைய படங்களில் உள்ள சுவராசிஸ்யம் இன்று இல்லை. இது ரசிகனின் ரசனை மாறியதால் வந்தது தான் என்றாலும் உண்மையில் பழைய படங்களின் ஆழ்ந்த கருத்துக்கள் இப்போதைய படங்களில் இல்லை என்றே சொல்லலாம்.

பழைய படங்களை எடுத்துக் கொண்டால் இதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். பாசமலர், தாய்க்குப் பின் தாரம், நீதிக்குத் தலைவணங்கு, தாயைக்காத்த தனயன், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், எங்க மாமா, படிக்காத மேதை, பேசும் தெய்வம், வஞ்சிக்கோட்டை வாலிபன், சக்கரவர்த்தி திருமகள், கர்ணன், எங்க வீட்டுப்பிள்ளை, மோட்டார் சுந்தரம்பிள்ளை, பழனி, அன்பே வா, காதலிக்க நேரமில்லை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ரசனை குறையாத பாடல்களும் கதையோட்டத்தில் தான் வருமே தவிர இக்கால படங்களைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திணித்திருக்க மாட்டார்கள். அதைப் போல காமெடியிலும் எவரையும் நக்கல் நையாண்டி செய்யாமல் குபீர் சிரிப்பை வரவழைக்கும் சாமர்த்தியம் அக்காலப் படங்களில் உண்டு என்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.

MGR Song

அர்த்தம் பொதிந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் பாடல்களைக் கேட்டாலே போதும். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் ஆழமான அர்த்தம் கொண்ட பாடல்கள் தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, திருடாதே பாப்பா திருடாதே, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, புதிய வானம், புதிய பூமி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற எம்ஜிஆர் பாடல்களையும், ஆறு மனமே ஆறு, போனால் போகட்டும் போடா, தேவனே என்னைப் பாருங்கள், மணப்பாறை மாடுகட்டி, உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, சட்டி சுட்டதடா ஆகிய பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு இந்தப்பாடல்களைக் கேட்டால் போதும். தீர்வு சொல்லி விடும்.

இக்காலப்பாடல்களை எடுத்துக் கொண்டால் ஐயோ பத்திக்கிச்சி…., எவன்டி உன்னைப் பெத்தான்….ஜலபுல ஜங், பிரைவேட் பார்ட்டி, அரபிக்குத்து பாடல்களை எல்லாம் எடுத்துக் கொண்டால் பாடலில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே தெரியவில்லை. இசை ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது.

ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் ரசனையும் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இசையில் தான் புதிய புதிய நுட்பங்கள் வருகின்றன. அதே போல தமிழ்சினிமாவின் தொழில்நுட்பங்கள் உலகத்தரத்திற்கு போய் விட்டதை நாம் பெருமையாக சொல்லியே ஆக வேண்டும். ஒரு சில படங்கள் இப்போதும் அருமையான திரைக்கதை, கதைகளத்துடன் பயணிக்கின்றன. அதை யாரும் மறுப்பதற்கில்லை. பெரும்பாலான படங்கள் ஒன்லைன் ஸ்டோரியாகவே வருகின்றன.

Pasamalar

அந்தக்கால படங்களில் கதைகள் கிளைக்கதைகளாகப் பிரிந்து ரசிகர்களின் மூளையைச் சலவை செய்து அவர்களின் வாழ்வு சிறக்கவும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் விதத்திலும் இருந்தன. விசுவின் படங்களை எடுத்துக் கொண்டால் அத்தனை படங்களிலும் குடும்பப் பிரச்சனைகளை பிரமாதமாகக் கையாண்டிருப்பார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, வேடிக்கை என் வாடிக்கை போன்ற படங்களைச் சொல்லலாம். அதே போல வி.சேகரின் படங்களும் இருக்கும்.

காலப்போக்கில் திருடனாகவும், நெகடிவ் ரோலிலும் கதாநாயகன் சித்தரிக்கப்பட்டு ரசிகர்களுக்கு மாறுபட்ட ரசனையைத் தருகிறான். அதை ரசிகர்களும் கடைபிடித்து விடுகிறார்கள். நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விட வேண்டும் என்பதை மறந்தே போகிறார்கள். மேலும் தற்போதைய படங்களில் பிரம்மாண்டம்,

ஒரு பாடலுக்காக வெளிநாடு என ரசிகர்களை திரையரங்கிற்கு வர வைக்க எத்தனையோ யுத்திகளைக் கையாள்கிறார்கள். பழைய படங்களின் டைட்டிலைப் பார்த்தாலே படம் பார்க்கத் தூண்டும். டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். ஆனால் இப்போது உள்ள படங்களின் டை;டில்கள் என்ன என்ன சொல்கின்றன என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒரு படமே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

IAMK

இக்கால இயக்குனர்களிலும் பிரமாதமாக தேசிய விருதுக்கு அழைத்துச் செல்லும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். படத்தின் போக்கும், திரைக்கதையும் நம்மை இருக்கையில் கட்டிப்போடச் செய்யும் படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அளவில் தான் உள்ளது.

பழைய படங்களில் எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்லாமல் வேறெந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் மக்கள் கதையைத் தான் பார்க்கச் செல்கிறார்கள். அதனால் படமும் பிரமாதமாக ஓடி விடுகிறது. 70, 80, 90 கால கட்ட படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

Published by
sankaran v