×

ரஜினி இப்படி பேசியும் பாஜகவில் அமைதி ஏன்?..பின்னணி என்ன?

டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும், பாஜகவிற்கு எதிராகவும் நேற்று ரஜினி கொடுத்த பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் இதுவரை 35 பேர் பலியாகிவிட்டனர். பலரும் காயமடைந்துள்ளனர். முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை எனில் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் எனக்கூறிய ரஜினி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் பாஜகவின் ஆதரவாளர் எனவும் பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது. கலவரத்தை அடக்க முடியாவிடில் மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும். 

வன்முறையை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே நேரம் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. மேலும், சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை’ என அவர் தெரிவித்தார். மேலும், நான் பாஜகவின் ஆதரவாளர் என சில மூத்த பத்திரிக்கையாளர்களே கூறுவது வேதனையாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக ரஜினி பாஜகவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவிப்பார்.எனவே, ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலரும் அவரின் கருத்தை வரவேற்றும், ஆமோதித்தும் கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால், இந்த முறை ரஜினி உளவுத்துறையின் தோல்வி என அமித்ஷாவை நேரடியாக தாக்கியுள்ளார். சமாளிக்க முடியவில்லை எனில் பதவியை விட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். இதை கமல்ஹாசன் வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், ரஜினியின் பேச்சுக்கு பாஜக தரப்பில் அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் டிவிட்டர் பக்கங்களில் இதுபற்றி எந்த கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களும் ரஜினிக்கு எதிராக எதுவும் பேசவில்லை. மயான அமைதியே நிலவுகிறது.

அதிமுக பாஜகவின் வசம் இருக்கிறது. அடுத்துள்ள திமுகவிற்கு எதிராக அவரை பேச வைப்பதே பாஜகவின் அசைன்மெண்ட். ஆனால், திடீரென பாஜகவிற்கு எதிராக ரஜினி பேசிவிட்டார். ஆனாலும், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக ரஜினியையே பாஜக நம்பியிருப்பதால் அவரின் கருத்துக்கு எதுவும் கூறாமல் அமைதி காப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தவரை பாஜகவிற்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு உடனடியாக பதில் கொடுப்பார். தற்போது அந்த பதவி காலியாக இருக்கிறது. அதுவும் ஒரு காரணம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News