சுந்தர் சியை தேர்வு செய்தது ஏன்? ‘ரஜினி 173’க்காக கமல் போட்ட பக்கா ப்ளான்
கிட்டத்தட்ட 32 வருடங்களாக ஒரு வெற்றி இயக்குனராக பயணித்து வருபவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி. முறைமாமன் தொடங்கி தற்போது தயாராகிவரும் மூக்குத்தி அம்மன் 2 படம் வரைக்கும் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருபவர். இவருடைய படங்களில் காமெடி, கலாட்டா, செண்டிமெண்ட், கிளாமர் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்பதிர்ச்சியாக மாறியிருக்கிறது. கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என்ற செய்திதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி வெளியானதுமே வழக்கம் போல எப்படி இது நடந்தது? எதனால் நடந்தது என நெட்டிசன்கள் ஆராய ஆரம்பித்துவிட்டனர்.
கமல் தக் லைஃப் படத்திற்கு பிறகு 180கோடி கடனில் சிக்கினார் என்றும் அந்த கடனை ஈடுகட்டவே ரஜினியை வைத்து படம் பண்ணலாம் என்ற முடிவை எடுத்ததாகவும் வெளியில் பேசிக் கொண்டு வருகின்றனர். கமலை பொறுத்தவரைக்கும் விக்ரம் படத்திற்கு முன்பே அவர் கடனில் இருந்திருக்கிறாராம். அதன் பிறகு விக்ரம் கொடுத்த லாபம், அமரன் கொடுத்த வெற்றி என அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து அந்த கடனை அடைத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் தக் லைஃப் பெருத்த நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அதுதான் அவரை கடனாளியாக மாற்றியிருக்கிறது. சரி, கடனை அடைக்கவேண்டும். அதற்கு நெல்சன் , லோகேஷ் மாதிரியான இயக்குனர்களை வைத்து எடுத்தால்தானே பெரிய படமாக வரும். சுந்தர் சியை அவர் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்று பார்த்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறதாம்.

ஒன்று ஹியூமராக எடுப்பதில் சுந்தர் சி ஒரு சிறந்த இயக்குனர். அதோடு பட்ஜெட்டையும் அதிகப்படுத்தமாட்டார். பெரிய அளவில் செலவு வைக்கமாட்டார் என்பதற்காகவே சுந்தர் சியை கமல் தேர்ந்தெடுத்தார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு வேளை நெல்சன், லோகேஷ் போன்றவர்களை பயன்படுத்தினால் பட்ஜெட்டை அதிகப்படுத்தி பேன் இந்தியா படம் என்று சொல்லி கோடிக்கணக்கில் செலவு வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அந்தப் படம் ஓடவில்லை என்றால் அது மேலும் கமலுக்கு பெருத்த அடியாக விழும் என்றும் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
