ஒடிசி படத்தை போலவே பிரம்மாண்டமாக ஐமேக்ஸில் ‘டாக்ஸிக்’ படத்தையும் பார்க்க ரெடியா!..
கேஜிஃப் படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படம் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், வித்தியாசமான உலகம் மற்றும் உயர்தரமான விஷுவல் அனுபவம் ஆகியவற்றுடன் உருவாகியுள்ள டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ் படத்தை ஐமேக்ஸ் திரையில் காண ரசிகர்களுக்கு செம ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி படத்தை ஐமேக்ஸ் திரையில் பார்க்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் முண்டியடித்த நிலையில், டாக்ஸிக் படத்துக்கும் ஐமேக்ஸ் திரைகளில் செம கலெக்ஷன் இருக்கும் என்கின்றனர்.
தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்த கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யஷ் மற்றும் வெங்கட் கே. நாராயணா இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. தற்போது ஐமேக்ஸ் வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாகும் நாளை இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.