ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது லத்தியா? கனெக்ட்டா?
விஷால், சுனைனா ஆகியோரின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகி இருக்கும் “லத்தி” திரைப்படமும், நயன்தாரா, வினய், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான “கனெக்ட்” திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
“லத்தி” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் “கனெக்ட்” திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “மாயா”, “கேம் ஓவர்” போன்ற தமிழின் மிக வித்தியாசமான படைப்புகளை கொடுத்தவர். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
“லத்தி” கதை:
தன்னை ஒருவன் காதலிக்கும்படி தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறான் என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் ஒரு இளம்பெண். அந்த புகாரை தொடர்ந்து அந்த பையனின் வீட்டிற்குச் சென்று எச்சரித்து வருகிறார் விஷால்.
அடுத்த நாள் அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை காதலிக்கச்சொல்லி டார்ச்சர் செய்த அந்த பையனை காவல் நிலையத்திற்கு இழுத்து வந்து உண்மையை ஒப்புக்கொள்ளச்சொல்லி லத்தியால் அடித்து துன்புறுத்துகிறார் விஷால்.
ஆனால் அந்த இளம்பெண் இறப்பதற்கு முன்பு கொடுத்த மரண வாக்குமூலத்தின்படி அந்த பெண் குறிப்பிட்டிருந்த எந்த அடையாளமும் அந்த பையனுக்கு இல்லை என தெரியவருகிறது. இதனை தொடர்ந்து ஒரு நிரபராதியை அடித்துக் கொடுமைப்படுத்தியதற்காக விஷால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். எனினும் டிஜிபியாக இருக்கும் பிரபுவின் உதவியால் 6 மாதத்திற்குள் மீண்டும் வேலைக்குச் சேர்கிறார் விஷால்.
இதன் பின் டிஜிபியாக இருக்கும் பிரபு, தனது மகளிடம் வெல்லா என்ற ரவுடி தவறாக நடந்துகொண்டதை கேள்விப்படுகிறார். அந்த வெல்லாவை பிடித்து தனது கஸ்டடிக்குள் வைத்திருக்கும் பிரபு, விஷாலை வைத்து லத்தியால் அடித்து டார்ச்சர் செய்யச் சொல்கிறார். வெல்லா என்ற ரவுடி அந்த ஊரின் மிகப்பெரிய கேங்க்ஸ்டரின் மகன் என விஷாலுக்கு தெரியாத நிலையில், விஷாலும் அவரது குழந்தையும் வெல்லாவின் ஆட்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். விஷாலும் அவரது மகனும் வெல்லாவிடம் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை.
“கனெக்ட்” கதை:
நயன்தாரா தனது கணவர் வினய் மற்றும் அவரது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்குகிறது. டாக்டராக இருக்கும் வினய், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். ஒரு கட்டத்தில் வினய்க்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட அவர் உயிரிழந்துவிடுகிறார்.
இதையும் படிங்க: உண்மையை சொன்னதால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சந்திரபாபுவின் மனைவி… அப்படி என்ன நடந்தது தெரியுமா??
தனது பாசமான தந்தை உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மகள், எப்படியாவது தனது தந்தையின் ஆவியிடம் பேசவேண்டும் என எண்ணி ஒரு சூனியாக்காரியை சந்திக்கிறாள். அந்த சூனியக்காரியின் செயலால் ஒரு கெட்ட ஆவி மகளுக்குள் புகுந்துவிடுகிறது. தனது மகளின் வித்தியாசமான நடவடிக்கைகளை பார்க்கும் நயன்தாராவிற்கு, தனது மகளுக்குள் ஒரு ஆவி புகுந்துவிட்ட விஷயம் தெரிய வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கு மத்தியில் வீட்டிற்குள்ளேயே இருந்து அந்த ஆவியை எப்படி நயன்தாரா விரட்டுகிறார் என்பதே “கனெக்ட்” படத்தின் கதை.
திரைக்கதை
“லத்தி” திரைப்படத்தை பொறுத்தவரை திரைக்கதை அவ்வளவாக எடுபடவில்லை. குறிப்பாக இறுதி கட்டத்தில் வரும் நீண்ட சண்டைக் காட்சி ரசிகர்களை பொறுமை இழக்கச் செய்கிறது. மேலும் மிகவும் பழக்கப்பட்ட ஒரு கதை என்பதால் பார்வையாளர்களுக்கு எந்த வித புது அனுபவமும் கிட்டவில்லை.
“கனெக்ட்” திரைப்படத்தில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், படம் மிக மெதுவாக நகர்வதால் ரசிகர்களை ஒரு கட்டத்தில் உச் கொட்டவைத்துவிடுகிறது. எனினும் படத்தின் நீளம் மிகவும் குறைவு என்பதாலும், படத்தின் கதை மிக விறுவிறுப்பாக இருப்பதாலும் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக அமைந்திருக்கிறது.
இசை
“லத்தி” திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமாராகவே அமைந்திருக்கிறது. எனினும் பின்னணி இசை ஓரளவு திரைக்கதையின் நகர்வுக்கு துணையாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு காரணத்தைச் சொல்லியா ஒதுக்குவது??… விஜயகாந்த்திற்கு பறிப்போன சினிமா வாய்ப்பின் பின்னணி இதுதான்…
“கனெக்ட்” திரைப்படத்தில் பிரித்வியின் பின்னணி இசை பார்வையாளர்களை பயமுறுத்துகிறது. கனெக்ட் படத்தில் இழையோடும் ஹாரர்தனத்தை பின்னணி இசை வேறு ஒரு தளத்திற்கு கொண்டுச்சென்றுள்ளது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு “லத்தி” திரைப்படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் வெறித்தனமாக புகுந்து விளையாடியிருக்கிறார். ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு கச்சிதம்.
அதே போல் “கனெக்ட்” திரைப்படத்தில் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை அசரவைத்துவிடுகிறது. குறிப்பாக இத்திரைப்படத்தின் ஹாரர் தன்மைக்கு ரிச்சார்டின் படத்தொகுப்பு மிகப்பெரிய பலம்.
லத்தியா? கனெக்ட்டா?
மொத்தத்தில் இந்த வாரம் கோலிவுட்டில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களில் இரண்டிற்குமே ஓரளவு கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. எனினும் ஆக்சன் பிளாக் விரும்பிகளுக்கு “லத்தி” ஒன் டைம் வாட்சபிள் படமாக அமைந்திருக்கிறது. ஹாரர் விரும்பிகளுக்கு “கனெக்ட்” நன்றாகவே கனெக்ட்டாகி இருக்கிறது என்றே கூறலாம்.