காஷ்மீரில் தத்தளித்த லியோ படக்குழுவினர்... உண்மையை உடைத்த தயாரிப்பாளர்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "லியோ" திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. அதன் பிறகுதான் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் பல பேட்டிகளில் "தமிழ் இயக்குனர்கள் சென்னையில் உள்ள ஸ்டூடியோவிலோ அல்லது இங்குள்ள பகுதிகளிலோ படப்பிடிப்பு நடத்துங்கள், அப்போதுதான் இங்குள்ள தொழிலாளர்கள் பயனடைவார்கள்" என்று கூறி வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் கே.ராஜன். அப்போது நிருபர் அவரிடம், "காஷ்மீரில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜய் சென்னையிலேயே இனி முழு படப்பிடிப்பும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறாரே. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என கேட்டார்.
அதற்கு பதிலளித்த கே.ராஜன், "எப்போ புத்தி வந்தது தெரியுமா? காஷ்மீரில் பல கஷ்டங்களை அனுபவித்து நஷ்டம் ஏற்பட்டு, படப்பிடிப்பு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதன் பிறகுதான் பேக்கப் செய்து சென்னைக்கு வந்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வந்தது. நான் ஒவ்வொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதெல்லாம் கெஞ்சி கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு தொழிலாளர்கள் எல்லாம் உங்களை நம்பி இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துங்கள் என்று. ஒரு 30 சதவிகிதம் ஒரு வேளை கதைக்கு தேவையாக இருந்தால் நீங்கள் வெளிமாநிலங்களிலோ வெளிநாட்டிலோ படப்பிடிப்பு நடத்துங்கள். நீங்கள் ஜாலியாக அனுபவிப்பதற்காக ஃபாரின் போனால் தயாரிப்பாளர் காலி ஆகிவார்" என மிகவும் வெளிப்படையாக அப்பேட்டியில் கூறியுள்ளார்.