ரசிகர்களை வச்சு செஞ்சாலும் ‘லிகர்’ செய்த சாதனை...அட இத்தனை கோடி வசூலா?!...
![liger liger](https://cinereporters.com/wp-content/uploads/2022/08/liger.jpg)
அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய தேவரகொண்டா. அதன்பின் சில ஹிட் படங்களில் நடித்தார். அதிரடி சண்டை காட்சிகள், பறக்கும் வாகனங்கள், பஞ்ச் வசனங்கள் என தெலுங்கு ஹீரோக்கள் செய்யும் எதையும் செய்யாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திடீரென தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கும் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து ‘லிகர்’ என்கிற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என 3 மொழிகளில் உருவானது. இப்படத்தில் விஜய தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் அம்மாவாக நடித்திருந்தார். மேலும், குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்தார்.
இப்படத்தை பூரி ஜெகன் நாத், நடிகை சார்மி, பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் என மூவரும் சேர்ந்து ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கினர். மேலும், இப்படத்தின் புரமோஷனுக்கும் சில கோடிகளை செலவு செய்தனர். இப்படம் மூலம் பாலிவுட்டிலும் விஜய தேவரகொண்டா நுழைந்துள்ளார்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்களை கவராமல் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்துப்போன காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இப்படத்திற்காக உடம்பை ஏற்றி கடுமையான உழைப்பை விஜய தேவரகொண்டா கொடுத்தார்.
ஆனாலும், மோசமான கதை, திரைக்கதையால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. விமர்சகர்களும் இப்படத்தை கழுவி ஊற்றினர். பல தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படம் எங்களை ஏமாற்றிவிட்டது. டிக்கெட் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என ஆதங்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், இப்படம் வெளியான ஒரு நாளில் உலகமெங்கும் சேர்த்து ரூ.33.12 கோடியை வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும். ஆனாலும் நெகட்டிவ் விமர்சனத்தால் இப்படத்தின் வசூல் குறையும் எனவும், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு இப்படம் பல கோடிகள் நஷ்டமாகும் எனவும் திரையுலகினர் கூறுவது குறிப்பிடத்தக்கது.