கம்மி பட்ஜெட் பெத்த லாபம்… லட்சம் போட்டு கோடியை எடுத்த லேட்டஸ்ட் திரைப்படங்கள்..

by Arun Prasad |   ( Updated:2022-09-23 10:02:13  )
கம்மி பட்ஜெட் பெத்த லாபம்… லட்சம் போட்டு கோடியை எடுத்த லேட்டஸ்ட் திரைப்படங்கள்..
X

சினிமாவில் சில நேரங்களில் கோடி ரூபாய் போட்டு படம் எடுப்பார்கள், ஆனால் படமோ கையைக்கடித்துவிடும். இது போல் தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் காணாமலும் போயிருக்கிறார்கள். இந்த நிலையில் கம்மி பட்ஜெட் போட்டு எதிர்பார்க்காத வகையில் பெத்த லாபம் பார்த்த திரைப்படங்களும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெத்த கலெக்சனை அள்ளிய லேட்டஸ்ட் திரைப்படங்களை பார்க்கலாம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரீது வர்மா, ரக்சன், நிரஞ்சனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து எதிர்பாரா விதமாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். வியகாம் 18, ஆண்டோ ஜோசஃப் பிலிம் கம்பெனி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படம் பட்ஜெட் வெறும் 10 கோடியே. ஆனால் இத்திரைப்படம் அள்ளியதோ 20 கோடி. இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட தயாரிப்பாளர்கள் இயக்குனருக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தனர் எனவும் கூறப்படுகிறது. “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாக ஒரு தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ் எஸ் லலித்குமாரும், ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

காதல், காமெடி கலந்த பக்கா கமர்சியல் திரைப்படமாக இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு பட்ஜெட் ரூ. 35 கோடி. ஆனால் கல்லா கட்டியதோ ரூ. 70 கோடி. போட்ட காசை விட பல மடங்கு லாபம் பார்த்திருக்கிறது இத்திரைப்படம்.

மாநாடு

சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “மாநாடு”. பல வருடங்களுக்கு பிறகு சிம்புவின் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக இத்திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். சுரேஷ் காமாட்சி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ. 156 கோடி வசூல் செய்து பல மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது. குறிப்பாக சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே 100 கோடி வசூலை தாண்டிய முதல் திரைப்படம் “மாநாடு”தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம்

சூர்யா, மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் தா செ ஞானவேல் இயக்கிய திரைப்படம் “ஜெய் பீம்”. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில சர்ச்சைகளையும் உண்டு செய்தது.

அதிகார வர்க்கம், போலீஸ் கொடுமைகள் என சமூகத்தின் அதிகார மையம் அடித்தட்டு மக்களிடம் நிகழ்த்தும் வன்முறையை அப்பட்டமாக கண்ணாடி போல் காட்டியிருப்பார் இயக்குனர். இத்திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 35 கோடி, ஆனால் கல்லா கட்டியதோ 70 கோடி. இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story