Cinema History
சிகரெட் புகையை இசையமைப்பாளர் முகத்தில் ஊதிய வாலி!.. முதல் பாட்டு எழுதும்போதே இப்படியா?..
திரையுலகில் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் துவங்கி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு காலம் வரை பல அசத்தலான பாடல்களை எழுதியுள்ளார். எல்லா காலத்திற்கும் ஏற்றார்போல் பாடல்களை எழுதுவதால்தான் அவரை வாலிப கவிஞர் வாலி என எல்லோரும் அழைத்தனர். எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களில் வாலி எழுதிய பாடல்கள் பல வருடங்கள் கடந்தும் இப்போதும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. பல காதல், தத்துவம் மற்றும் ஆன்மீக பாடல்களை வாலி எழுதியுள்ளார்.
சினிமா வாய்ப்பு:
வாலி சினிமாவில் பாட்டெழுதும் ஆசையில் சென்னை வந்தார். பல வருடங்கள் போராடி வறுமையில் வாடி வாய்ப்பு தேடித்தான் பாடலாசிரியராக மாறினார். ‘அழகர்மலை கள்வன்’ என்கிற படத்தில் அவருக்கு முதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் பி.கோபாலன். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். கேம்பராஜ் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
முதல் பாடல் அனுபவம்:
இந்த படத்திற்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வாலி ‘அந்த அறையில் இசையமைப்பாளரும், ஸ்ரீனிவாசன் என்பவரும் இருந்தனர். அவர்தான் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார். நான் உள்ளே போய் அமர்ந்ததும் ‘நீங்கள் என்ன சிகரெட் குடிப்பீர்கள்?’ என சீனிவாசன் கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இசையமைப்பாளர் முன்னே எப்படி சிகரெட் குடிக்க முடியும்? என நான் யோசித்தேன். ஆனாலும் விடாத அவர்ஒரு சிகரெட்டை கொடுத்து என்னை புகைக்க சொன்னார். நானும் சிகரெட்டை இழுத்து புகை விட்டேன். அது ஒரு தாலாட்டு பாடல் ‘நிலவும் தாரையும் நீயம்மா.. உலகம் ஒருநாள் உனதம்மா’ என்கிற பல்லவி எழுதி அரைமணி நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்துவிட்டேன். அந்த பாடலை சுசிலா பாடினார்.
எல்லாமே பில்டப்பு:
அதன்பின் அவரிடம் தனியாக பேசும்போது ‘இசையமைப்பாளர் முன்பு என்னை சிகரெட் குடிக்க சொல்கிறீர்களே.. அவர் என்னை தலைக்கணம் பிடித்தவன் என நினைக்க மாட்டாரா?.. அடுத்தமுறை பாடல் எழுத என்னை அழைப்பாரா?’ எனக்கேட்டேன். அதற்கு அவர் ‘நீங்கள் தமிழ்நாட்டில் பெரிய பாடலாசிரியர் என அவரிடம் பில்டப் செய்து சொல்லியிருக்கிறேன். இல்லையேல் நீங்கள் பாட்டெழுத அவர் அனுமதிக்கமாட்டார். அதற்காகத்தான் அந்த பில்டப்’ என சொன்னார்’ என வாலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அழகர்மலை கள்வன் திரைப்படம் 1959ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.