Connect with us
saravana store

டைம் லூப்பில் ஒரு ஆடு புலி ஆட்டம்…மாநாடு பட விமர்சனம்….

maanaadu

Cinema News

டைம் லூப்பில் ஒரு ஆடு புலி ஆட்டம்…மாநாடு பட விமர்சனம்….

நடிகர்கள்: சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்
இயக்கம்: வெங்கட் பிரபு.

டைம் லூப் (Time Loop) பிரச்சனையில் சிக்கும் சிம்பு அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை…

ஒருவருக்கு ஒரு நாளில் ஒரே நிகழ்வு திரும்ப திரும்ப நடக்கும் நிகழ்வுதான் டைம் லூப். ஹாலிவுட்டில் இதை வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளது. தமிழில் அப்படி ஒரு புது முயற்சியை துவங்கி வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

simbu

தனது நண்பன் காதலித்த பெண்ணை கடத்தி அவருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தோடு துபாயில் இருந்து கோவை வருகிறார் அப்துல் காலிக் (சிம்பு). திருமணம் நடக்கும் போது ஒரு விபத்து நேர்கிறது. அதிலிருந்து தப்பிக்க முதல்வரை கொலை செய்ய சொல்கிறார் காவல்துறை அதிகாரி தனுஷ்கோடி(எஸ்.ஜே.சூர்யா) . எனவே, முதல்வரை கொல்கிறார் சிம்பு. போலீசார் அவரை சுட்டுக்கொலை செய்கின்றனர். திடீரென விழித்து பார்த்தால் சிம்பு மீண்டும் விமானத்தில் இருக்கிறார். அப்போதுதான் அவர் டைம் லுப் பிரச்சனையில் சிக்கியிருப்பது அவருக்கு புரிகிறது.

Maanaadu trailer

இதிலிருந்து தப்பிக்க வேண்டும். மேலும் முதல்வரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே மீதி படம். இதில் பிரச்சனை என்னவெனில் சிம்பு இறந்துவிட்டால் கதை மீண்டும் முதல் இருந்து துவங்கும். முதல்வரை காப்பாற்ற முடியாமல் போனால் அவர் சாக வேண்டும். ஏனெனில் அப்போதுதான் அவர் முதலில் இருந்து மீண்டும் முதல்வரை காப்பாற்றும் வேலையை துவங்க முடியும். இது வில்லனுக்கு தெரிய வர அவன் சிம்புவை சாகவிட மாட்டான். இப்படி ஒரு சிக்கலான கால பயணத்திற்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே மாநாடு.

இது மிகவும் சிக்கலான கதை. இதை ரசிகர்களுக்கு புரியும் படியும், சுவாரஸ்யமாகவும் திரைக்கதையாக அமைப்பது சிரமம். ஆனால். அதில் வெற்றிபெற்றுள்ளார் வெங்கட் பிரபு. இந்த கதையை தேர்ந்தெடுத்த போதே வழக்கமாக அவர் படம் எடுக்கும் பாணி இதில் இருக்கக் கூடாது என நினைத்ததுவிட்டார் போல. படம் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது. ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல் படத்தை நகர்த்தி செல்கிறார். மங்காத்தா திரைப்படத்திற்கு பின் இப்படம் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சிம்புவும் இப்படத்தின் கதையை புரிந்து கொண்டு தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி இப்படத்தில் நடித்துள்ளார். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். உடல் இளைத்து பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கிறார். வேகமாக ஓடுகிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட். வெல்கம் பேக் சிம்பு.

simbu

சிம்புவுக்கு பின் இப்படதில் முக்கிய வேடம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு. மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அவரின் குரலும், உடல் மொழியும் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். இப்படத்தில் அவர் வந்த பின்பே படம் ஜெட் வேகத்தில் பரபரவென பறக்கிறது. அவரின் திரைவாழ்வில் மாநாடு முக்கிய படமாக இருக்கும்.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். இப்படம் அவருக்கு பல வட வாய்ப்புகளை பெற்றுத்தரும்.

Maanaadu trailer

Maanaadu trailer

இப்படத்தில் அடுத்த ஹீரோ எடிட்டர் கே.எல்.பிரவீன். ஏனெனில், டைம் லூப் தொடர்பான காட்சிகளை ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல் பிரமாதமாக படத்தொகுப்பை செய்துள்ளார். இப்படம் அவருக்கு 100வது படம் என்பது கூடுதல் தகவல். அவருக்கு ஒரு பூங்கொத்து. அதேபோல் ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம் நாதனும் கடுமையாக உழைத்துள்ளார்.

அடுத்து யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. 2ம் பாகம் முழுவதும் கதையின் வேகத்தில் அவரின் பின்னணி இசையும் சேர்ந்து பயணிக்கிறது. இவரின் பிஜிஎம்-ல் தியேட்டர் அதிர்கிறது. மங்காத்தாவுக்கு பின் ஒவ்வொரு காட்சியிலும் மனுஷன் உழைத்திருக்கிறார். அதேபோல், இப்படத்தில் அசத்தலான வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன். இவரை சரியாக பயன்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு.

மொத்தத்தில் பரபரவென செல்லும் டைம் லூப் கதை. ரிப்பீட் ஆடியன்ஸ் நிச்சயம்..

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top