சினேகாதான் ஹீரோயினா?? “நோ” சொன்ன மாதவன்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
புன்னகை அரசி என்று புகழ்பெற்ற சினேகா, மலையாளத்தில் “இங்கனே ஒரு நிலா பக்சி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதன் பின் தமிழில் மாதவன் நடித்த “என்னவளே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
“என்னவளே” திரைப்படம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மாதவன், சினேகா ஆகியோருடன் மணிவண்ணன், சார்லி, வையாபுரி என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் படம் சுமாராகவே ஓடியது.
“அலைபாயுதே” திரைப்படத்தின் மாபெறும் வெற்றிக்கு பிறகு தனது நண்பரான இயக்குனர் ஜே.சுரேஷின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்தாராம் மாதவன். இத்திரைப்படத்தை தயாரிக்க என்.வி.பிரசாத், நாக அஷோக் குமார் ஆகிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் முன் வந்தனராம்.
இந்த புதிய திரைப்படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கலாம் என யோசித்த இயக்குனர் சுரேஷ், சிம்ரனிடம் சென்று கதையை கூறினாராம். ஆனால் சிம்ரன் அப்போது மிக பிசியாக இருந்தாராம். ஆதலால் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அதன் பின் ஜோதிகாவிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். அவரும் மிக பிசியாக இருந்ததால் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.
இதனை தொடர்ந்து மாளவிகாவிடம் பேசிப் பார்க்கலாம் என மாதவன் கூற, அதற்கு சுரேஷ் மறுத்துவிட்டாராம். “மாளவிகா இந்த கதைக்கு செட் ஆக மாட்டார்” என கூறினாராம்.
அதன் பின் பிரபல புகைப்பட கலைஞரான சுரேஷ் மெர்லின் என்பவர் இயக்குனர் சுரேஷிடம் சினேகாவின் புகைப்படத்தை காட்டினாராம். சினேகாவின் புகைப்படத்தை பார்த்தவுடன் “இந்த பெண்தான் நமது கதைக்கு செட் ஆவார்” என சுரேஷுக்கு தோன்றிவிட்டதாம். அதன் பிறகு சினேகாவை வரவழைத்து ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார் சுரேஷ். “மிகவும் பொருத்தமான பெண், இவரையே நடிக்க வைக்கலாம்” என முடிவெடுத்துவிட்டாராம் சுரேஷ்.
ஆனால் மாதவனுக்கோ சினேகாவை இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க விருப்பமே இல்லையாம். மேலும் அறிமுக நடிகையாக இல்லாமல் முன்னணி நடிகைகளில் யாரையாவது இதில் நடிக்க வைக்கலாம் என மாதவன் யோசனை கூறினாராம்.
எனினும் இயக்குனர் சுரேஷ் சினேகாவை விட்டுக்கொடுக்காமல் பேசினாராம். இதனால் மாதவனுக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் கூட ஏற்பட்டதாம். ஒரு கட்டத்தில் மாதவன் “சரி, என்னுடன் சேர்ந்து ஜோடியாக இருக்கும்படி ஃபோட்டோஷூட் எடுப்போம். இருவருக்கும் மேட்ச் ஆகிறதா என பார்க்கலாம். அதன் பின் முடிவு செய்துகொள்ளலாம்” என்ற முடிவுக்கு வந்தாராம் மாதவன்.
அதன் பின் சினேகாவை மாதவன் வீட்டிற்கு அழைத்து வந்து ஜோடியாக ஃபோட்டோஷூட் நடத்தினார்களாம். ஆனாலும் மாதவனுக்கு திருப்தியே இல்லையாம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகைகளில் யாரையாவது ஒப்பந்தம் செய்யுங்கள் என மாதவன் கூறினாராம். எனினும் இயக்குனர் சினேகாவைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றாராம். அதன் பிறகுதான் மாதவன், “என்னவளே” திரைப்படத்தில் சினேகாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.