மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம்… சொந்த செலவில் டப் செய்து கல்லா கட்டிய ஏவிஎம்..

by Arun Prasad |
மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம்… சொந்த செலவில் டப் செய்து கல்லா கட்டிய ஏவிஎம்..
X

1943 ஆம் ஆண்டு பிரேம் அதீப், சோபனா சாம்ராத் ஆகியோரின் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் “ராம்ராஜ்யா”. ராமாயணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலத்தில் மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்தது.

குறிப்பாக இந்திய விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி தன் வாழ்நாளிலேயே ஒரே திரைப்படத்தை தான் பார்த்தார். அத்திரைப்படம் “ராமராஜ்யா” தான்.

“ராமராஜ்யா” திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ராமர், ராவணனை வீழ்த்திய பிறகு தான் இத்திரைப்படத்தின் கதையே தொடங்கும். சீதை அக்னி பிரவேசம் செய்த பின் ராமர் அவரை அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது ஒரு சலவை தொழிலாளி சீதையை இழிவாக பேச ராமர் அவரை காட்டுக்கு அனுப்பிவிடுகிறார். அங்கு சீதைக்கு லவனும் குசனும் பிறக்கிறார்கள்.

லவனும் குசனும் ராமர் யார் என்பதை அறியாமல் போர் தொடுக்கிறார்கள். ராமர் சீதாவை அயோத்திக்கு அழைத்துச் செல்ல வரும்போது சீதா வரமறுத்து பூமி பிளந்து உள்ளே போய்விடுகிறார். இதை கண்டு ராமர் அழுவதுடன் இத்திரைப்படம் முடிகிறது.

காந்தி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே படமான “ராமராஜ்யா” திரைப்படத்தை ஏவிஎம்மும் திரும்ப திரும்ப பார்த்தார். இத்திரைப்படத்தை தமிழிலும் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய ஏவிஎம், இத்திரைப்படத்தின் உரிமையை வைத்திருந்த எவர்கிரீன் என்ற நிறுவனத்தை அணுகினார்.

“இதனை தமிழில் டப் செய்ய நாங்கள் அனுமதி தருகிறோம். ஆனால் அது உங்கள் சொந்த செலவில் செய்யவேண்டும். ஆனால் வருகிற வருவாயில் ஒரு பங்கை எங்களுக்கு கொடுத்துவிட வேண்டும்” என கண்டிஷன் போடுகிறார்கள்.

பொருட்செலவை பற்றியெல்லாம் யோசிக்காத ஏவிஎம், “ராமராஜ்யா” திரைப்படத்தை தமிழில் டப் செய்ய முடிவெடுக்கிறார். அதுவும் தன் சொந்த செலவில்.

“ராமராஜ்யா” திரைப்படத்தை அப்படியே டப் செய்யாமல் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் அதில் இணைத்தார் ஏவிஎம். அதாவது ராமர் பட்டாபிஷேகத்திலிருந்து ராவணனின் போர் காட்சிகள் வரை நிழல் காட்சிகளாக உருவாக்கி படத்தின் தொடக்கத்தில் இணைத்தார். இது ராமாயணத்தின் கதை சுருக்கமாகவும் மக்களுக்கு இத்திரைப்படம் எதில் இருந்து தொடங்குகிறது என்பது போன்ற விஷயங்களை விளக்குவதாகவும் அமைந்தது.

மேலும் ஒரு டப்பிங் திரைப்படம் என்று தெரியாத அளவுக்கு இத்திரைப்படத்தை மிகவும் நேர்த்தியாக உருவாக்கினார் ஏவிஎம். அதன் பின் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. குறிப்பாக கேரளத்தில் வரலாறு காணாத வெற்றித் திரைப்படமாகவும் விளங்கியது.

தனது லாபத்தில் பாதி பங்கு போனாலும், இத்திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கி கல்லா கட்டிய ஏவிஎம்மின் சினிமா மோகம் எந்த அளவுக்கு வெறியானது என்பதை இச்சம்பவம் நமக்கு காட்டுகிறது.

Next Story