“ஒரு சிகரெட் கிடைக்குமா?”… ரஜினியிடம் கேஷுவலாக கேட்ட மகேந்திரன்... ஆனால் உருவானதோ ஒரு கல்ட் சினிமா…
1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், படாஃபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முள்ளும் மலரும்”. இத்திரைப்படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தார். இதில் காளி என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினி நடித்திருந்தார் என்று சொல்வதை விட காளியாகவே வாழ்ந்திருந்தார் என்றுதான் கூறவேண்டும்.
அந்த அளவுக்கு தனது சினிமா கேரியரிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த். மேலும் இத்திரைப்படம் காலத்திற்கும் பேசப்பட்டு வரும் கல்ட் சினிமாவாகவும் உருவாகியது. இந்த நிலையில் “முள்ளும் மலரும்” திரைப்படத்தின் உருவாக்கம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.
வசனகர்த்தா
1977 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, சங்கீதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆடு புலி ஆட்டம்”. இத்திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கதை-வசனம் ஆகியவற்றை எழுதியவர் மகேந்திரன்.
சிகரெட் கிடைக்குமா?
“ஆடு புலி ஆட்டம்” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது ஒரு நாள் மகேந்திரன் மேக்கப் அறையில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே வசனங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்த சிகரெட் தீர்ந்துவிட்டது.
மகேந்திரன் தீவிர புகைப்பழக்கம் உடையவர். ஆதலால் அவருக்கு உடனடியாக ஒரு சிகரெட் தேவைப்பட்டது. அப்போது பக்கத்து அறையில் இருந்து புகை ஒன்று கிளம்பியதாம். யாரோ சிகரெட் பிடிக்கிறார்கள், அவரிடம் சென்று ஒரு சிகரெட் கொடுக்கமுடியுமா என கேட்கலாம் என்று பக்கத்து அறைக்குச் சென்றாராம்.
இதையும் படிங்க: “எழுதி வச்சிக்கோங்க இவ ஒரு பொம்பள அமிதாப் பச்சன்”… சூப்பர் ஸ்டார் நடிகையை சூப்பர் ஸ்டாரிடமே புகழ்ந்த ஹிட் இயக்குனர்…
அந்த அறையில் ரஜினிகாந்த் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது ரஜினியை பார்த்து “என் பெயர் மகேந்திரன். நான்தான் இந்த படத்திற்கு கதை வசனம் எழுதுகிறேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாராம். அதன் பின் யதார்த்தமாக கேட்பது போல் “ஒரு சிகரெட் கிடைக்குமா?” என ரஜினியை பார்த்து கேட்டாராம். ரஜினியும் உடனே ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டினாராம். இந்த சந்திப்பு பின்னாளில் நட்பாக மாறியது.
முள்ளும் மலரும்
இச்சம்பவத்தை தொடர்ந்து இருவருக்குள்ளும் உள்ள நட்பு மிகவும் நெருக்கமானது. தினமும் ரஜினிகாந்த்தின் அறையில் இருவரும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்களாம். அந்த தருணத்தில் ரஜினியின் நடிப்பாற்றலை பற்றி புரிந்துகொண்ட மகேந்திரன், “முள்ளும் மலரும்” கதையில் வரும் காளி கதாப்பாத்திரத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தாராம்.
அதனை தொடர்ந்து “முள்ளும் மலரும்” கதையும், காளியின் கதாப்பாத்திரமும் ரஜினிக்கு பிடித்துப்போக அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இப்போதும் ரஜினிகாந்த்தின் கேரியரில் அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களின் பட்டியலில் “முள்ளும் மலரும்” திரைப்படம் பிரதான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.