இயக்குனர் சங்கரிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்....!
தமிழ் சினிமாவில் எப்படி விஜய் அஜித்தோ அதேப்போல தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகவும் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மகேஷ் பாபு தமிழிலும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான தெலுங்கு படங்கள் தமிழில் அதிகளவில் ரீமேக் ஆகியுள்ளன. தற்போது மகேஷ்பாபு நடிப்பில் சர்காரு வாரி பட்டா படம் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ் பாபு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறியதாவது, "ஒருமுறை, நான் என் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது இரண்டு பெண்கள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டார்கள்.
நான் குடும்பத்துடன் இருந்ததால் தனிப்பட்ட நேரம் என்று கூறி மறுத்துவிட்டேன். அப்போது ஒரு நண்பர் என்னிடம் வந்து, அந்த பெண்கள் இருவரும் இயக்குனர் சங்கரின் மகள்கள் என்று கூறினார். அதைக்கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனே அவர்களை சந்திக்க சென்றேன்.
அப்போது இயக்குனர் சங்கரை பார்த்து அவரின் பெண்களுக்கு ஆட்டோகிராப் போட மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அப்போது சங்கர் ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை என் மகள்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். சங்கரின் மகள்கள் இருவருமே மிகவும் சாதாரணமாக இருந்தார்கள். அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளார்.