“ஆடையை சரிசெய்ய உன்னோடு நானும் வருகிறேன்” - போதையில் நடிகரின் அநாகரீகம்.. பிரபல நடிகை சொன்ன பகீர் சம்பவம்!

பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், படப்பிடிப்பு தளத்தில் தாம் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், வின்சியின் குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 'விக்ருதி', 'பீமன்டே வழி', 'ஜன கண மன', 'சௌதி வெல்லக்கா' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வின்சி அலோஷியஸ், 2023-ல் வெளியான 'ரேகா' மலையாள படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். இவர் அண்மையில் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வின்சி, "இனி நான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன். யாராவது போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர் என்று அறிந்தால், அவர்களுடன் ஒருபோதும் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதை தெளிவுபடுத்துவதற்காக வின்சி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் தனக்கு நேர்ந்த பகீர் சம்பவத்தை வெளிப்படுத்தினார்.

அதில், "ஒரு படத்தில் முன்னணி நடிகருடன் பணியாற்றிய போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் அணிந்த ஆடையை சரி செய்வதாக கூறிய போது, 'நானும் உங்களுடன் வருகிறேன். நீங்கள் ரெடியாக நான் உதவி செய்கிறேன்' என கூறி சங்கடப்படுத்தினார்" என்று கூறியுள்ளார்.
அதன்பின், "படப்பிடிப்பு தளத்தில் அவர் வாயிலிருந்து வெள்ளையாக ஏதோ ஒன்று டேபிளில் சிந்தியது. அப்பொழுது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிசெய்தேன். இது சுற்றியிருந்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருவருடன் பணியாற்ற விரும்பவில்லை. என்னுடைய இந்த முடிவால் சில பட வாய்ப்புகள் பறிபோனாலும், அப்படியானவர்களுடன் வேலை செய்வதில் ஆர்வமில்லை" என்றார்.