சினிமா எடுக்க வந்து பாதை மாறிய மலேசியா வாசுதேவன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!...
80,90 களில் பாடகராக, நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர் மலேசியா வாசுதேவன். இளையராஜாவின் இசையில் பல நூறு பாடல்களை பாடியுள்ளார். நடிகர் சிவாஜிக்கும், ரஜினிக்கும் இவரின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அவர்கள் இருவருக்கும் பல பாடல்களை பாடியிருக்கிறார்.
முரட்டுக்காளை, மாவீரன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினிக்கு எல்லா பாடல்களையும் வாசுதேவன் பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையில் வாசுதேவன் பாடிய ‘பூங்காத்து திரும்புமா’ உள்ளிட்ட பல பாடல்கள் இப்போதும் இசை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.
இதையும் படிங்க: அடக்கி ஆளுது முரட்டுக்காளை….குரலால் அடக்கி ஆண்ட மலேசியா வாசுதேவன்..!
மலேசியாவில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் வாசுதேவனுக்கு தமிழ் மொழி மீது அதிக ஆர்வம். அதனால், தமிழ் மொழியிலேயே படித்தார். தமிழ் மொழிதான் பேசினார். ஒரு நாடகத்தை சினிமாவாக எடுக்க ஆசைப்பட்டு இந்தியா வந்தார். அவரின் குரல் நன்றாக இருந்ததால் பாடகராகும்படி பலரும் சொல்லவே, அப்போது பல படங்களுக்கும் இசையமைத்து வந்த ஜி.கே.வெங்கடேஷின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இளையராஜா தனது சகோதரர்களுடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என்கிற பெயரில் இசைக்கச்சேரி நடத்தி வந்தார். மலேசியா வாசுதேவன் அதில் தன்னை இணைத்துக்கொண்டு பாடல்களை பாடிவந்தார். எம்.எஸ்.வி. இசையில் ஒரு படத்தில் பாடினார். இயக்குனர் ஏபி நாகராஜன் வாசுதேவனை மலேசியா வாசுதேவன் என பெயரை மாற்றினார்.
இதையும் படிங்க: சினிமா மீதுள்ள மோகம்! கடைசியில் அம்மாவின் இறுதிச்சடங்கை கூட பண்ண முடியாத சோகம்
பதினாறு வயதினிலே படம் துவங்கி பல படங்களில் இவரை பாட வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கினார் இளையராஜா. 86 திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் சுரேந்திரனும் திரையுலகில் நடிகர் மற்றும் பாடகர் என வலம் வந்தார்.
இளையராஜாவின் மெலடி காற்றில் உலவும் வரை மலேசியா வாசுதேவனின் குரலும், பாடல்களும் இசை ரசிகர்களின் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: பின்னணி இசையே இல்லாமல் இசையாக உருகிப் பாடிய பாடகர் இவர் தான்…!