விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் மும்மூட்டி?? வேற லெவல் காம்போவா இருக்கே!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கிவரும் “விடுதலை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில்”மேரி கிரிஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இவ்வாறு படுபிசியாக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வந்தது.
மேலும் அத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக களமிறங்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. இது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
ஆறுமுக குமார் இதற்கு முன் விஜய் சேதுபதியை வைத்து “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில்தான் ஆறுமுக குமார் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதியே இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது “காக்கா முட்டை” திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன், விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம். அத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
மணிகண்டன் இதற்கு முன் விஜய் சேதுபதியை வைத்து “ஆண்டவன் கட்டளை”, “கடைசி விவசாயி” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.