நெஜமாவா!.. அருந்ததி படத்துல ஃபர்ஸ்ட் சாய்ஸ் 'மகாராஜா' பட நடிகையாம்... அப்ப அனுஷ்கா இல்லையா?...

by ramya suresh |
நெஜமாவா!.. அருந்ததி படத்துல ஃபர்ஸ்ட் சாய்ஸ் மகாராஜா பட நடிகையாம்... அப்ப அனுஷ்கா இல்லையா?...
X

அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அருந்ததி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அருந்ததி. அனுஷ்கா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். ஹாரர் திரில்லர் படம் என்றாலும் அனுஷ்காவை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகை அனுஷ்கா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

கொடி ராமகிருஷ்ணன் இயக்கிய அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அனுஷ்கா இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மம்தா மோகன் தாஸ் தானாம். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழில் குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிடம் மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். தெலுங்கில் இவர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய யமடோங்கா திரைப்படத்தின் மூலமாகத்தான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு நடிக்க வந்த வாய்ப்பு தான் அருந்ததி. கோடி ராமகிருஷ்ணன் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மம்தாவை தான் அணுகி கதை கூறி இருக்கின்றார். அவரும் இப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களினால் படத்தில் இருந்து விலகி விட்டார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது: "அருந்ததி படத்தில் நடிக்க முதலில் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணன் என்னை அணுகினார். எனக்கு கதை பிடித்துப் போனது. அதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தேன். அப்போது என் மேனேஜர் என்னிடம் வந்து அருந்ததி படத்தின் தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாந்த் ஹிட் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கடைசி படத்தில் கூட அவர் நிறைய படங்களை இழந்து விட்டார் என்று கூறினார்.

அதனால் இந்த படத்தை அவரால் முழுமையாக எடுக்க முடியாது. படத்தை பாதியிலேயே நிறுத்தி விடுவார் என்று கூறினார். இதை கேட்ட உடனே நான் இப்போதுதான் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்தோம். அதுவும் இப்படி ஒரு ட்ராப் இருந்தால் அது சினிமா வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக மாறிவிடும் என்று எண்ணி அப்படத்தில் இருந்து வெளியேறி விட்டேன். எனது முடிவால் இயக்குனர் ராஜமௌலி மிகவும் வருத்தம் அடைந்தார். நீங்கள் உங்கள் திரை வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறினார். இதை கேட்டு நான் வருத்தமடைந்தேன்" என்று மம்தா அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

Next Story