1983 ஆம் ஆண்டு பாண்டியன், ரேவதி ஆகியோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மண் வாசனை”. இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார். கலைமணி இத்திரைப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார். மேலும் பஞ்சு அருணாச்சலம் “மண் வாசனை” திரைப்படத்திற்கான வசனங்களை எழுதியிருந்தார்.
பாண்டியன், ரேகா ஆகியோர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்திற்கு முதலில் ஷோபனாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்திருந்தார் பாரதிராஜா. ஆனால் ஷோபனா அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாலும் பொதுத் தேர்வு நெருங்கி வந்ததாலும் ஷோபனாவின் தந்தை “மண் வாசனை” திரைப்படத்தில் நடிக்க அவரை அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்துதான் தனது தம்பியின் மூலம் ஆஷா என்ற பெண்ணை கண்டடைந்தார் பாரதிராஜா. அப்பெண் “மண் வாசனை” திரைப்படத்தின் கதாநாயகி ரோலுக்கு சரியாக பொருந்துவார் என நினைத்த பாரதிராஜா, ஆஷா என்ற பெயரை ரேகா என்று மாற்றி அவரை ஒப்பந்தம் செய்தார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜாவும், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் மதுரையில் “மண் வாசனை” திரைப்படத்தின் கதாநாயகனுக்கான தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே பாரதிராஜாவை பார்க்க வந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையனை அழைத்து காரில் ஏற்றிக்கொண்டாராம் அவர். அந்த பையனை பற்றிய விவரத்தை எல்லாம் வாங்கிக்கொண்டாராம் பாரதிராஜா. அந்த பையனின் பெயர்தான் பாண்டியன். அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே சொந்தமாக வளையல் கடை வைத்திருந்தார்.
பாண்டியன்தான் இந்த படத்தின் ஹீரோ என்று பாரதிராஜா, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கூறினாராம். இதனை கேட்ட சித்ரா லட்சுமணனுக்கு தலையே சுற்றிவிட்டதாம். இவ்வளவு பெரிய ஊரில் வேறு பையனா கிடைக்கவில்லை என்று மனதில் ஆதங்கப்பட்டாராம் சித்ரா லட்சுமணன். இந்த பையனை வைத்து படம் எடுத்தால் நமது கதி அவ்வளவுதான் என சித்ரா லட்சுமணன் தனது அறையில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவரது அறைக்கு கதாசிரியர் கலைமணி வந்தாராம். அவரிடம் சித்ரா லட்சுமணன் விவரத்தை கூற, கலைமணி சித்ரா லட்சுமணனை அழைத்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டாராம்.
அங்கே பாண்டியனை பார்த்த கலைமணி, “இந்த பையனையா ஹீரோ என்று முடிவு செய்திருக்கிறார்” என அதிர்ச்சியடைந்தாராம். பாரதிராஜாவிடம் எப்படியாவது பேசி ஹீரோவை மாற்றச் சொல்லவேண்டும் என்ற நினைப்புடன் சித்ரா லட்சுமணனை அழைத்துக்கொண்டு பாரதிராஜாவின் அறைக்குச் சென்றார் கலைமணி. அப்போது பாரதிராஜா “நம்ம கதாநாயகனை பார்த்தீங்களா? எப்படி இருக்கான்?” என மிகவும் நம்பிக்கையோடு கேட்டாராம். பாரதிராஜா இவ்வளவு நம்பிக்கையோடு கூறும்போது அவரிடம் இதனை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என கலைமணி நினைத்தார்.
இதையும் படிங்க: ஷங்கருக்குள் இருந்த தயாரிப்பாளரை எழுப்பிய பிரபல இயக்குனர்… நைஸ் மூவ்!!
இதனை தொடர்ந்து தேனிக்கு அருகே படப்பிடிப்பு தொடங்கியது. படக்குழுவினர் யாருக்கும் பாண்டியனை பிடிக்கவில்லை. அப்போது மீண்டும் பாரதிராஜாவை பார்த்து ஹீரோவை மாற்றும்படி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை சண்டையில் போய் முடிய “இனி நடப்பது நடக்கட்டும்” என முடிவெடுத்து பேசாமல் இருந்துவிட்டாராம் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
“மண் வாசனை” திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நல்லபடியாக முடிவடைந்தபோது படக்குழுவினர் அனைவரும் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அப்போது அக்கோயிலில் முருகனுக்கு தீபாராதனை காட்டுபவர் பாரதிராஜாவையும் ரேவதியையும் பார்த்துக்கொண்டே தீபாராதனையை காட்டியதால் கவனக்கோளாறு காரணமாக முருகன் அணிந்திருந்த உடையின் மீது தீப்பட்டுவிட்டது. முருகனின் உடை கொளுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லையாம். இப்படி ஒரு அபசகுணம் நடந்துவிட்டதே என எண்ணி மனக்கலக்கத்திற்கு ஆளானாராம் அவர்.
எனினும் இது தீபாராதனை காட்டியவரின் தவறுதானே என்று மனதை தேற்றிக்கொண்டாராம் அவர். ஆனால் இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இத்திரைப்படத்தை ஏற்கனவே வாங்கியிருந்த சில விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியிட தயாராக இல்லை என கூறி சித்ரா லட்சுமணனுக்கு கொடுத்த முன்பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டார்களாம். இந்த சம்பவத்தையும் முருகனின் உடை எரிந்த சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பார்த்த சித்ரா லட்சுமணன் பெரிதும் மனக்கலக்கத்திற்கு உள்ளானாராம்.
ஆனால் இதை எல்லாவற்றையும் தாண்டி “மண் வாசனை” திரைப்படம் நல்லபடியாக வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது குறித்து சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பேசியபோது “எந்த பாண்டியனை நான் கதாநாயகனாக ஆக்க கூடாது என்று மறுத்தேனோ, அதே பாண்டியனை மக்கள் அத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். பாரதிராஜாவின் கணிப்பு எவ்வளவு அசாத்தியமானது என்பதை அன்று நான் புரிந்துகொண்டேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…