மாநாடு படத்திற்கு வந்த சோதனை... தயாரிப்பாளர் போட்ட வேதனை பதிவு....!
கடந்தாண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் மாநாடு. எதிர்பார்ப்புகளை மீறி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
தற்போது மாநாடு படம் வெளியாகி இன்றுடன் 75 நாள் ஆகிறது. இதனை ரோகினி திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இப்படி படம் கொரோனா காலகட்டத்திலும் இத்தனை நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி சாதனை படைத்து வருகிறது.
வசூலையும் வாரி குவித்து தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சோகத்தில் மூழ்கி உள்ளார்.
காரணம் மாநாடு படம் வெளியாகி இத்தனை நாட்களாகியும் இன்னும் விநியோகிஸ்தர்கள் கணக்கை ஒப்படைக்கவில்லையாம். மேலும் இதுகுறித்து கூறியுள்ள சுரேஷ் காமாட்சி, "ஒரு வெற்றி படத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலையை என்ன சொல்வது?
இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்வது? நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போவதில் எந்த தவறும் இல்லை என யோசிக்க தோன்றுகிறது" என மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். பல பணப்பிரச்சனைகளை தாண்டியும், போராட்டங்களை சந்தித்தும் வெளியான மாநாடு படத்தின் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை.