மங்கையைத் தந்த மகத்துவமான படங்கள் - ஓர் பார்வை
தமிழ்சினிமாவிற்கு எந்தத் தலைப்பு வைத்தால் படம் வெற்றி பெறும் என்பது தெரிந்துள்ளது. அதற்கேற்ப தொடர்ந்து ஒரே வார்த்தையில் முடியும் தலைப்பாக வந்து விட்டது.
அந்த வரிசையில் இன்று நாம் காண இருப்பது மங்கையில் முடியும் மகத்துவமான படங்கள் தான். அவை என்னென்ன என்று பார்ப்போமா...!
மாலையிட்ட மங்கை
1958ல் வெளியான படம். ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப்படத்திற்கு கதை எழுதி தயாரித்தவர் கவியரசர் கண்ணதாசன். தனக்கான துறையை மட்டும் கவிஞர் விட்டுவைப்பாரா எனன? பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த படம்.
டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்மினி, பிரியதர்சினி, காகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். 15 பாடல்களையும் கவித்துவமாக எழுதி மாபெரும் வெற்றி பெற வைத்தார் கண்ணதாசன்.
செந்தமிழ் தேன் மொழியாள், எங்கள் திராவிட பொன்னாடே, நான் இன்றி யார் வருவார், அம்மா உன்னைக் கொண்டு வானத்திலே, இல்லறம் ஒன்றே நல்லறம், சாட்டையில்லா பம்பரம் போல், அன்னையின் நாட்டைப் பகைவர்கள், அன்னம் போல பெண்ணிருக்கு உள்பட பல முத்தான பாடல்கள் உள்ளன.
மங்கையர்க்கரசி
1949ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஜித்தன் பானர்ஜி. பியு.சின்னப்பா, என்எஸ்கே., டி.ஏ.மதுரம், அஞ்சலிதேவி, லலிதா, பத்மினி, காகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு ஜி.ராமநாதன், குன்னக்குடி வெங்கட்ராம ஐயர், சி.ஆர்.சுப்புராமன் என மூவர் இசை அமைத்துள்ளனர். பார்த்தால் பசி தீரும், காதல் கனிரசமே ஆகிய தேனான பாடல்கள் உள்ளன.
மணாளனே மங்கையின் பாக்கியம்
1957ல் வெளியான படம். வேதாந்த ராகவைய்யா இயக்கியுள்ளார். ஜெமினிகணேசன், டி.எஸ்.துரைராஜ், எஸ்.வி.சுப்பையா, கருணாநிதி, அஞ்சலி தேவி, ராஜசுலோச்சனா, ஈ.வி.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் அந்தக்காலத்தில் தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றது
படம் பார்த்து விட்டு வரும் தாய்மார்கள் மறுநாள் தங்கள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பக்கத்து வீட்டுப் பெண்களுடன் தான் பார்த்த கதையை ரசித்து ரசித்துச் சொல்லி மகிழ்வார்கள். ஆதிநாராயணராவ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். தேசுலாவுதே, அழைக்காதே, ஜெகதீஸ்வரா உள்பட பல பாடல்கள் உள்ளன.
மங்கை ஒரு கங்கை
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன், நீராடி வா தென்றலே, ஓடம் இது ஓடட்டுமே, அழகிய நிலவிது உள்பட பல பாடல்கள் உள்ளன. 1987ல் வெளியான படம்.
சரிதா, நதியா, சரண்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், கமலா காமேஷ், சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இந்தி இசை அமைப்பாளர்கள் லட்சுமிகாந்த் - பியரிலால் இசை அமைத்து படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கினர்.