இயக்குனர் மணிரத்னத்திற்கு 65 வயதாகிறது ஆனால் இன்னும் இளமையான இயக்குனராக பலரால் விரும்பப்படுகிறார். இவர் மீது பலரும் அதிசயித்து பார்க்கும் ஒரு விசயம் என்னவென்றால் இவர் படம் இயக்கிய காலத்தில் இவருடன் படம் இயக்கிய அனைத்து இயக்குனர்களும் தற்போது ரிட்டயர்மெண்ட். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்த பல இயக்குனர்களை தற்போது வலை போட்டு தேட வேண்டியுள்ளது.
அந்தக்காலங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கே.ரங்கராஜ் போன்றவர்களை நீண்ட இடைவேளைக்கு பின் கண்டு பிடித்து சில வருடங்கள் முன்பு தான் ஒரு பத்திரிக்கை, பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது.
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், மோகன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் 80களில் படம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமா பீல்டில் தற்போது இல்லை. வயோதிகம் இன்னும் பல காரணங்களால் அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். அப்படியே அவர்களில் யாராவது ஒருவர் படம் எடுத்தாலும் தற்கால சூழ்நிலைகளுக்கு 80களின் ஸ்டைல் ஒத்து வராது என்பதால் அப்படங்கள் ஓடுவதுமில்லை. இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் உட்பட மணிரத்னம் படம் இயக்கிய காலங்களில் இருந்த இயக்குனர்களின் மகன்களும் படம் இயக்க வந்து விட்டனர்.
சமீபத்தில் கூட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் அனபெல் சேதுபதி படத்தை இயக்கினார்.
ஆனால் இயக்குனர் மணிரத்னம் மட்டும் 80களில் இருந்து இன்று வரை பீல்டில் இயக்குனராக இருக்கிறார். கார்த்திக்கை வைத்து மெளனராகமும் இயக்கினார் தற்போதுள்ள கார்த்தியை வைத்து காற்று வெளியிடையும் இயக்குகிறார் எல்லா காலத்துக்குமான இயக்குனராக அவர் இருக்கிறார். அவர் வயது இயக்குனர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆன பின்னும் மணிரத்னம் இன்னும் இயக்குனராக ஜொலிப்பதன் மர்மம் என்ன என்று பார்த்தால் சாதாரண விசயம்தான் ஒன்றும் இல்லை என்று சொல்லும் வகையில்தான் உள்ளது.
நவநாகரீகமான விசயங்களை அனைவரும் விரும்புகிறார்கள். அதனால் தன் படங்களை ஸ்டைலாகவே நகர பாணியில் மாடர்னாக இயக்குவதே இன்று வரை மணிரத்னம் ஃபீல்டில் நிலைத்திருக்க முக்கிய காரணம் ஆகும்.
மணிரத்னம் முதன் முதலில் தமிழில் இயக்கிய பகல் நிலவு, இதயக்கோயில் இரண்டு படங்களையும் பார்க்காதவர்கள் பாருங்கள் இருட்டான ஒளிப்பதிவு இருக்காது, படம் கமர்ஷியலாக இருக்கும் குத்துப்பாட்டு, குத்து டான்ஸ், லோக்கலான வார்த்தைகள், படத்தின் கதை சாதாரண கதையாகத்தான் இருக்கும்.
சொல்லப்போனால் இதயக்கோயில், பகல் நிலவு போன்ற படங்களில் கவுண்டமணி வரும் தனி காமெடி டிராக்கை எல்லாம் பார்த்தால் மணிரத்னம் படம் என்றே சொல்ல முடியாது படத்தின் கதையும் கமர்ஷியலாக சாதாரணமாகத்தான் இருந்தது.
ஆனால் பகல் நிலவு, இதயக்கோயில் இரண்டு படங்களும் ஓரளவு பேசப்பட்ட படம்தான் ஆனால் அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய மெளனராகம் படத்தை அக்கால சூழ்நிலைக்கேற்ப ஸ்டைலிஷாக வடிவமைத்திருந்தார். மோகன், கார்த்திக், ரேவதி அனைவரின் கதாபாத்திரமும் பாராட்டப்பெற்றது. இப்படம் ஸ்டைலிஷான வித்தியாசமான திரைக்கதைக்கான, வித்தியாசமான காதல் படத்துக்கான, வித்தியாசமான நடிப்புக்கான, வித்தியாசமான ஷார்ட் அண்ட் ஸ்வீட் வசனங்களுக்கான , வித்தியாசமான ஒளிப்பதிவுக்கான ட்ரெண்ட் செட் படம் என சொல்லலாம்.
மணிரத்னத்தின் படங்களில் ஒளிப்பதிவு டார்க் ஆக இருக்கும் எந்த ஒளிப்பதிவாளரை அவர் தன் படத்தில் பயன்படுத்தினாலும் அந்த படம் டார்க் ஆகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
நாயகன், அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே, அஞ்சலி, தளபதி, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்,உயிரே , அலைபாயுதே, காற்று வெளியிடை , செக்க சிவந்த வானம், ஆயுத எழுத்து, ஓக்கே காதல் கண்மணி உள்ளிட்ட அன்று முதல் இன்று வரை எல்லாவிதமான படங்களிலும் மணிரத்னம் ஸ்டைல் ஒரே மாதிரியாகவே இருக்கும். வசனங்களும் சொல்லு, என்ன என்று இரண்டு வார்த்தைகளில் முடியும் அளவுதான் இருக்கும்.
மணிரத்னத்தின் படங்கள் பொதுவாக ஏ சென் டர்கள் எனப்படும் சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் தான் ஓடும். சிறிய நகரங்களில் மணிரத்னம் படங்கள் பெரிய அளவில் போகாது. உண்மையை சொல்ல போனால் மெளன ராகம், தளபதி, நாயகன், ரோஜா இந்த நான்கு படங்கள்தான் மணிரத்னத்துக்கு பெரிய அளவில் பேசப்பட்டது மற்ற படங்கள் எல்லாம் மணிரத்னத்துக்கு பல்வேறு பாராட்டுக்களை மட்டுமே பெற்று கொடுத்தது.
இவரின் குறிப்பிட்ட சில படங்களை தவிர மற்ற படங்களை எல்லாம் அனைவரும் ஒரு கரகாட்டக்காரன் ரேஞ்சுக்கோ, ஒரு சேது ரேஞ்சுக்கோ, ஒரு ஜென் டில் மேன் ரேஞ்சுக்கோ சாரை சாரையாய் கூட்டம் கூட்டமாய் சென்று தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் மன்னன் பட ரஜினி ரேஞ்சில் சென்று பார்க்கவில்லை என்பது முக்கியமான விசயம்.
ரொம்பவும் டீசண்ட் ரசிகர்களை நம்பி மட்டுமே மணிரத்னம் படம் இயக்கினார். தியேட்டரில் விசிலடித்து ஆரவாரமாய் பார்க்கும் அளவிலான படங்களை இதுவரை மணிரத்னம் இயக்கவில்லை.
எல்லா தரப்பு ரசிகர்களையும் அவர் கவரவில்லை குறிப்பாக ஷங்கர் இயக்கிய ஜென் டில்மேன் படத்தையோ முதல்வன் படத்தையோ ஒரு கிராமத்து ரசிகன் ரசித்து பார்ப்பான் ஆனால் மணிரத்னத்தின் ரோஜாவையோ, பம்பாயையோ, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தையோ அது நல்ல படமாக இருந்தாலும் பாமர ரசிகன் நல்ல படம் என்று பாராட்டுவதோடு நிறுத்தி விடுவான். பெரிய அளவில் கொண்டாட மாட்டான்.
2000ங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய பல படங்கள் வந்திருந்தாலும் அது அப்படி இப்படி என ஆயிரம் பெருமையாக பலர் சொன்னாலும் அந்த படங்கள் எதுவுமே பெரிதாக போகவில்லை ஆனால் இன்னும் பலரும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக சொல்லுகிறார்கள். பல புதிய ஹீரோயின்கள் திரையில் அறிமுகமானவுடன் சினிமா நிருபர்களின் கேள்வி வழக்கமாக இந்த இரண்டு கேள்விகள் வரும்.
நீங்க யாரோட ஹீரோயினா நடிக்க விரும்புறிங்க என்பார்கள். அதற்கு அந்த நடிகை ரஜினி, அஜீத் என்பார். யார் இயக்கத்தில் நடிக்க விரும்புறிங்க என்பார்கள். அதற்கு அந்த நடிகைகள் மணிரத்னம் என்பார்கள் அதுதான் மணிரத்னத்தின் மேஜிக். பல வருடம் ஃபீல்டில் உள்ளார், வயதாகி விட்டது, 2000ங்களுக்கு பின் வந்த ஒரு சில படங்களை தவிர பெரும்பான்மையான படங்கள் பேசப்படவேயில்லை அப்படி இருந்தும் மணிரத்னம் இன்றும் பலராலும் விரும்பப்படுகிறார் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் அவர் இயக்கிய நாயகன், தளபதி, மெளன ராகம் ரேஞ்ச்ல ஒரு படமாவது வருமா என்று ரசிகர்கள் இப்போதும் நினைக்கிறார்கள் அந்த நேரமும் அந்தக்கால கூட்டணிகளும் வேறு. இளையராஜா மணிரத்னம் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் செம ஹிட். ஏ.ஆர் ரஹ்மானை மணிரத்னம் தான் தனது ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். ரஹ்மானின் இசை உலகத்தரத்தில் உணரப்படுவதாலும் அவர் ஆஸ்கர் வாங்கிய பிறகு ரஹ்மானின் இசை உலக அளவில் சென்று விட்டதாலும் அவர் பிஸியாக இருப்பதாலும் மணிரத்னம், ஏ.ஆர் ரஹ்மான் இவர்கள் கூட்டணியில் ஆரம்பத்தில் வந்த ஹிட் பாடல்கள் பின்னாட்களில் வந்த படங்களில் இல்லை என சொல்லலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால் மணிரத்னத்தின் படங்கள் உயர் ரக படித்த மக்களை கவர்ந்ததே தவிர விசிலடிச்சான் குஞ்சுகளையும், கிராமத்து, சிறு நகரத்து வாழ் மக்களையும் கவரவில்லை. விசிலடிச்சான் குஞ்சுகளும்,கிராம மக்கள், ஆண்கள் , பெண்கள் என குடும்பம் குழந்தைகளோடு ரசித்து ஆரவாரம் செய்த படங்களே தமிழ் சினிமாவில் பல வரலாறுகள் படைத்திருக்கின்றன. அந்தக்காலத்தில் வந்த முந்தானை முடிச்சு, கரகாட்டக்காரன், விதி, மாப்பிள்ளை, மன்னன், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன் என இன்னும் பல படங்கள் கமர்ஷியலாக இருந்ததால் மக்களை கவர்ந்தது, இப்படங்களை பெண்களும் ஆரவாரமாக தியேட்டர் சென்று பார்த்தனர் ஆனால் மணிரத்னத்தின் முதல் இரண்டு படங்களான பகல் நிலவு, இதயக்கோயில் என இரண்டு படங்களை தவிர்த்து, அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான பாராட்டை பெற்றிருந்தாலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அந்த படங்கள் கவரவில்லை என்பதே உண்மை.
இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய் போன்ற மணிரத்னம் படங்களை பல நல்ல விசயத்துக்காக பாராட்டலாம். ஆனால் தற்போது சில வருடங்கள் முன் வெளியான காற்று வெளியிடை டைப் படங்கள் எல்லாம் சுத்தமாக பார்க்கவே முடியாத ரகம் என்பதே உண்மை.
இதில் சில வருடங்கள் முன்பு
மணிரத்னம் படங்கள் பெரிய அளவில் ரீச் என சொல்லப்பட்டாலும் உண்மை நிலை எல்லா தரப்பினரையும் அவரின் படங்கள் கவரவில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லா மைனஸ்களையும் தாண்டி தமிழ் சினிமாவின் இளைஞனாக இன்றும் கெத்தாக கால் மேல் கால் போட்டு முன்னணி இயக்குனராக உட்கார்ந்து இருப்பதே மணிரத்னம் என்ற மாபெரும் கலைஞனின் சிறப்பு.
அவர் யாராலும் இயக்க முடியாது என கைவிடப்பட்ட கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை தற்போது படமாக்கி வருகிறார். அந்த படமாவது அந்தக்கால மணிரத்னம் ரசிகர்களை கவருமா என்று பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற வாழ்த்துவோம்.