18 நாளில் முடிந்த ஷூட்டிங்.. யாரும் எதிர்பார்க்காத வெற்றி.. மணிவண்ணனின் தரமான சம்பவம்..
“கோபுரங்கள் சாய்வதில்லை”, “24 மணி நேரம்”, “அமைதிப்படை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் மணிவண்ணன். சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர், தமிழில் பல வெற்றித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
எனினும் மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் கவனிக்கத்தக்க திரைப்படம் என்றால் அது “100 ஆவது நாள்” திரைப்படம்தான். 1984 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக அமைந்தது. அக்காலத்தில் இது மிகவும் புதுமையான முயற்சியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பேய் திரைப்படங்களுக்கு இணையாக பல த்ரில்லர் காட்சிகள் நிறைந்த படம் இது.
இதில் சத்யராஜ் தனது டெரரான லுக்கில் ரசிகர்களை பயமுறுத்தினார். இப்போதும் சத்யராஜ் என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது “100 ஆவது நாள்” திரைப்படம் தான். நளினி, மோகன், சத்யராஜ், விஜயகாந்த், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ் என பலரும் நடித்த இத்திரைப்படம் தமிழக திரையரங்குகளை ஒரு கலக்கு கலக்கியது. இப்போதும் தமிழில் வெளிவந்த சிறந்த ஹாரர் திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.
இந்த நிலையில் “100 ஆவது நாள்” திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அத்திரைப்படம் 18 நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்ட திரைப்படமாம். அத்திரைப்படத்தில் பல்வேறு மாறுபட்ட காட்சிகள் உண்டு, பாடல்கள் உண்டு. மிகவும் நேர்த்தியாக அத்திரைப்படத்தை இயக்கியிருப்பார் மணிவண்ணன். இப்படிப்பட்ட ஒரு தரமான திரைப்படத்தை 18 நாட்களில் எடுத்துமுடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிவண்ணன் ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றும் திறமையாளரும் கூட. தேவையில்லாத காட்சிகள் எதையும் அவர் எடுக்கமாட்டாராம், தேவையுள்ள காட்சிகளை மட்டுமே எடுத்து எந்த சொதப்பலும் இல்லாமல் எடிட்டிங்கில் வரிசைப்படுத்தி அத்திரைப்படத்தை சிறப்பாக கொண்டுவரும் தேர்ந்த இயக்குனராக திகழ்ந்திருக்கிறார். எனினும் அக்காலத்தில் நவீன திரைப்படக்கருவிகள் இல்லாத நாட்களிலேயே 18 நாட்களில் தமிழின் மாபெரும் ஹிட் படத்தை மணிவண்ணன் உருவாக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.