46 வயதில் குச்சிப்புடி நடனமாடிய மஞ்சு வாரியர்!.. என்ன காரணம் தெரியுமா?..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் மனைவியாக நடித்து அடிப்பொலி பாடலுக்கு ஆடி அசத்தியிருந்த மஞ்சு வாரியர் தற்போது உலக நடன தினத்தை முன்னிட்டு குச்சிப்புடி ஆடியுள்ள வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மஞ்சு வாரியர் காட்சியம் என்னும் மலையாளப் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சல்லாபம், தூவல் கொட்டாரம், களியாட்டம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்று குவித்துள்ளார். மேலும், மலையாள திரைத்துறையின் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்ட இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக்கொண்டார். பின்பு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த மஞ்சு வாரியர் சில காரணங்களால் கணவரையும் பிரிந்தார். திலீப் நடிகை காவ்யா மாதவனை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அவர் பேன் இந்தியா படமான லூசிஃபர் படத்தில் நடித்து மீண்டும் மாஸ் காட்டினார். மேலும், மஞ்சு வாரியர் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் துணிவு, விடுதலை 2, வேட்டையன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
மஞ்சு வாரியர் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மோகன்லாலுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்த லூசிஃபர் படத்தின் 2ம் பாகமான எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது.
இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் மஞ்சு வாரியர் நேற்று உலக நடன தினத்தை முன்னிட்டு அவரது பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தை தாளத்துடன் ரசித்து ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 46 வயதில் என்னம்மா ஆடுறாரு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.