வடிவேலுவின் மார்க்கெட் குறித்து அன்றே கணித்த மனோபாலா… இவ்வளவு துள்ளியமாக கணிச்சிருக்காரே!
தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்களில் வலம் வந்த மனோபாலா, கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். மனோபாலா வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல பிரபலமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
உதாரணத்திற்கு விவேக்கும் மனோபாலாவும் இணைந்து நடித்த "எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்" என்ற பிரபலமான காமெடி காட்சியை கூறலாம். இந்த காமெடி காட்சி அந்த சமயத்தில் பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது. அதே போல் வடிவேலுவுடன் இணைந்து, "இம்சை அரசன்", "தலைநகரம்", "குசேலன்" போன்ற பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார் மனோபாலா.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல பத்திரிக்கைக்கு மனோபாலா ஒரு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் வடிவேலுவை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
வடிவேலு கதாநாயகனாக நடித்த "இந்திரலோகத்தில் நா அழகப்பன்" திரைப்படத்தில் மனோபாலா நடித்திருந்தார். அத்திரைப்படம் வடிவேலு இந்திரலோகம், பூலோகம் என மாறி மாறி பயணிப்பார். மேலும் இந்திரனாகவும் வடிவேலு நடித்திருப்பார். அதில் பூலோகத்தில் வடிவேலுவுக்கு நண்பனாக நடித்திருந்தார் மனோபாலா. அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மனோபாலா வடிவேலுவிடம், "பூலோகத்தில் இடம்பெறும் காட்சிகள் எல்லாம் திருப்தியாக இருக்கிறது. இந்திரலோகம் இடம்பெறும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு வடிவேலு, "எனது நடிப்பை பார்த்து நன்றாக இருக்கிறது என்று என்னை சுற்றி உள்ளவர்கள் பாராட்டினார்கள்" என கூறினாராம். ஆனால் அத்திரைப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய மனோபாலா, "வடிவேலு மிகவும் திறமையானவர். ஆனால் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அவரை சுற்றியுள்ளவர்கள் அவரை பாராட்டி பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அப்படி பாராட்டி பேசுபவர்களே பின்னாளில் வடிவேலுவை வேறு மாதிரி ஆக்கிவிடுவார்கள்" என கூறியிருக்கிறார்.
சமீப காலமாக வடிவேலுவின் திரைப்படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைப்பதில்லை. அவர் கதாநாயகனாக நடித்த "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" திரைப்படத்தில் கூட நகைச்சுவை காட்சிகள் சரியாக அமையவில்லை என்றும் விமர்சனங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை… எந்த நடிகைக்கும் அதை பண்ண தைரியம் இல்ல!..