“ஹீரோவோட ஃபிரண்டு ரோல் போதும் எனக்கு”… தன்னை தானே தாழ்த்திக்கொண்ட சிவகார்த்திகேயன்…
சிவகார்த்திகேயன் தற்போது தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அந்த அளவிற்கு அவரது வளர்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோதே சிவகார்த்திகேயன் பலராலும் ரசிக்கப்பட்டார். மேலும் அவர் “கலக்கப்போவது யாரு”, “ஜோடி நம்பர் ஒன்” போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அதன் பின்பு “மெரினா” என்ற திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறுதான்.
தனது வசீகரமான நடிப்பால் இளைஞர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார் சிவகார்த்திகேயன். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்”, “மான் கராத்தே”, “ரெமோ” என பல திரைப்படங்களின் மூலம் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களிடம் ஒரு தனியான இடத்தை பிடித்தார் சிவகார்த்திகேயன்.
விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்குத்தான் திரையரங்குகளில் மாஸ் ஓப்பனிங் இருப்பதாக பல தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூறி வருகின்றனர். இவ்வாறு தனது திறமையாலும் உழைப்பாலும் டாப் ஹீரோவாக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனின் தொடக்க கால சினிமா பயணம் குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை தனது வீடியோ ஒன்றில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா பகிர்ந்துள்ளார்.
அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயனின் திறமையைப் பார்த்து அசந்துபோன மனோபாலா, சிவகார்த்திகேயனை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தாராம். அதன் படி அவரது அலுவலகத்திற்கு வந்த சிவகார்த்திகேயன், மனோபாலாவிடம் பல விஷயங்கள் மனம் விட்டு பேசினாராம்.
அப்போது சிவகார்த்திகேயன் “சினிமாவில் ஹீரோவுக்கு நண்பனாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஒரு படத்தில் ஹீரோவுக்கு நண்பன் என்ற கதாப்பாத்திரம் இருந்தால் என் நியாபகம்தான் வரணும்” என கூறினாராம்.
அதற்கு மனோபாலா “ஏன் உன்னை நீயே குறுக்கிக் கொள்கிறாய்?” என கேட்டாராம். அதற்கு சிவகார்த்திகேயன் “என்னுடைய தகுதிக்கு அது போதும் சார். நம்ம தகுதிக்கு அந்த மாதிரி ரோல்தானே சார் தருவாங்க” என மிகவும் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு பேசினாராம்.
ஆனால் சிவகார்த்திகேயனே எதிர்பார்க்காத அளவு, தற்போது தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக அவர் இருக்கிறார். இதுதான் அவரது தகுதி என்பது அவருக்கே தெரியாமல் இருந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.